முகமது நபிகள் குறித்த சர்ச்சை பேச்சு: உலக அரங்கில் எமது தேசத்தின் மதிப்பும் மரியாதையும் சிதைக்கப்பட்டுவிட்டது - உத்தவ் தாக்கரே


முகமது நபிகள் குறித்த சர்ச்சை பேச்சு: உலக அரங்கில் எமது தேசத்தின் மதிப்பும் மரியாதையும் சிதைக்கப்பட்டுவிட்டது - உத்தவ் தாக்கரே
x

பிரதமரின் புகைப்படங்கள் குப்பைத் தொட்டிகளில் வைக்கப்பட்டு, நாட்டுக்கே பெருத்த அவமானத்தை பாஜக ஏற்படுத்தியுள்ளது என உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார்.

மும்பை,

நபிகள் நாயகம் குறித்து பாஜக பிரமுகர் பேசிய விவகாரம் சர்ச்சையான நிலையில், மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே பா.ஜனதாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

சமீபத்தில் பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா நபிகள் நாயகம் குறித்து பேசிய சம்பவம் பெரும் சர்ச்சையானது. உலகளவில் இஸ்லாமிய நாடுகள் பலவும் இதுகுறித்து இந்தியாவிற்கு கண்டனம் தெரிவித்த நிலையில், இந்தியாவும் பதில் விளக்கம் அளித்தது.

இந்நிலையில் மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அவுரங்காபாத்தில் நேற்று நடந்த பேரணியில் உரையாற்றினார். அப்போது இந்த விவகாரம் குறித்து உத்தவ் தாக்கரே பேசியதாவது,

"முகமது நபி பற்றி அவர்கள் ஏன் கருத்து சொல்ல வேண்டும்? நம் கடவுள்கள் நமக்குப் பிரியமானவர்களைப் போலவே, அவர்கள் தங்கள் தெய்வங்களையும் வணங்குகிறார்கள்... மற்ற மதங்கள் மீது ஏன் வெறுப்பு காட்ட வேண்டும்..?

இந்தியா இப்போது அனைத்து முஸ்லீம் நாடுகளிலும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. பிரதமரின் புகைப்படங்கள் குப்பைத் தொட்டிகளில் வைக்கப்பட்டு, இந்த நாட்டுக்கே பெருத்த அவமானத்தை பாஜக ஏற்படுத்தியுள்ளது.

பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஒருவரின் பேச்சால், மொத்த தேசமும் அவமானப்பட வேண்டியிருக்கிறது. அவருடைய சர்ச்சை கருத்தால், பாஜகவின் மதிப்பும் மரியாதையும் சிதைக்கப்படவில்லை, ஆனால் மாறாக, எமது தேசத்தின் மதிப்பும் மரியாதையும் சிதைக்கப்பட்டுவிட்டது.

எங்களது இந்துத்துவா எந்த மதத்தையும் வெறுப்பதை போதிக்கவில்லை. எங்களுக்கு இந்துத்துவா கற்றுத்தராதீர்கள். பாஜகவினரின் ஆசைகளுக்கு எதிராக கடந்த 2.5 ஆண்டுகால ஆட்சியை நாங்கள் நிறைவு செய்துள்ளோம். அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகளை எங்கள் பின்னால் சுற்றவைப்பதற்கு பதிலாக, காஷ்மீர் பண்டிட்டுகள் விவகாரத்தில் கவனம் செலுத்தலாம்" என பேசினார்.


Next Story