உடுப்பி கல்லூரி மாணவி ஆபாச வீடியோ விவகாரம்; தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை-போலீஸ் மந்திரி பரமேஸ்வர் உறுதி


உடுப்பி கல்லூரி மாணவி ஆபாச வீடியோ விவகாரம்; தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை-போலீஸ் மந்திரி பரமேஸ்வர் உறுதி
x

உடுப்பி கல்லூரி மாணவி ஆபாச வீடியோ விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் மந்திரி பரமேஸ்வர் உறுதிபட கூறினார்.

பெங்களூரு:

உடுப்பி கல்லூரி மாணவி ஆபாச வீடியோ விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் மந்திரி பரமேஸ்வர் உறுதிபட கூறினார்.

ஆபாசமாக வீடியோ

கர்நாடக மாநிலம் உடுப்பியை அடுத்த அம்பலபாடியில் தனியார் பாராமெடிக்கல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் படித்து வந்த 3 மாணவிகள், கல்லூரி கழிவறையில் செல்போனை வைத்து சக மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்து, அந்த வீடியோவை கல்லூரி ஆண் நண்பர்களின் வாட்ஸ்-அப் குழுவிலும் பகிர்ந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இந்த சம்பவம் உடுப்பி மட்டுமின்றி கர்நாடகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

3 மாணவிகள் மீது வழக்கு

இதற்கிடையே கழிவறையில் செல்போனை வைத்து சக மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்த 3 மாணவிகளையும் இடைநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது. மேலும் 3 மாணவிகள் மீதும் மல்பே போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், எந்த வீடியோ ஆதாரமும் கிடைக்கவில்லை. மேலும் அந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்பதும் தெரியவந்தது.

நடிகை குஷ்பு ஆய்வு

இதற்கிடையே நேற்று முன்தினம் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான நடிகை குஷ்பு, உடுப்பி கல்லூரிக்கு சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறுகையில், கல்லூரி கழிவறையில் செல்போன் கேமரா உள்பட எந்த ரகசிய கேமராவும் வைக்கப்படவில்லை. மேலும் மாணவிகள், மாணவர்களின் செல்போன்களில் எந்த வீடியோவும், ஆபாச படமும் இல்லை. இந்த விவகாரத்தில் போலி வீடியோக்கள் சமுக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இந்த விவகாரத்திற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம். மேலும் அரசியல் ஆக்க வேண்டாம் என்று கூறியிருந்தார்.

செல்போன் ஆய்வுக்கு அனுப்பிவைப்பு

இந்த நிலையில் கல்லூரி மாணவி ஆபாச வீடிேயா விவகாரத்தில் செல்போனில் இருந்த வீடியோ அழிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் போலீசார் நேற்று அந்த செல்போனை பெங்களூருவில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அந்த செல்போனில் இருந்து வீடியோவை அழித்தாலும், அது செல்போனில் உள்ள ஐ-கிளவுட்டில் சேமிக்கப்பட்டிருக்கும். அந்த வீடியோவை எடுக்க அதிகாரிகள் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர். மேலும், ஆபாச வீடியோவை பதிவு செய்ததாக கூறப்படும் செல்போனில், வீடியோவை அழித்தாலும், அவற்றை கோர்ட்டு அனுமதியுடன் செல்போன் நிறுவனத்திடம் இருந்து திரும்ப எடுக்க முடியும் என தெரிகிறது. இதனால் கோர்ட்டு அனுமதியை பெறவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை

இ்ந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக போலீஸ் மந்திரி பரமேஸ்வர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உடுப்பி கல்லூரி கழிவறையில் வீடியோ எடுக்கப்பட்ட சம்பவத்தில் என்னை பற்றி தனிப்பட்ட முறையில் பா.ஜனதாவினர் விமர்சித்துள்ளனர். அதுபற்றி நான் கவலைப்படவில்லை. அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன். ஆனால் கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா படுதோல்வி அடைந்துள்ளது.66 இடங்களில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும் அந்த கட்சி தலைவர்கள் இன்னும் பாடம் கற்கவில்லை.

அந்த வழக்கில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சட்டப்படி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தவறு செய்தவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தை வைத்து பா.ஜனதாவினர் அரசியல் செய்கிறார்கள். அவர்களுக்கு அரசியல் செய்ய வேறு எந்த விஷயமும் இல்லை. அதனால் அவர்கள் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள்.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

1 More update

Next Story