சிவசேனா யாருக்கு சொந்தம் என்பதை தீர்மானிக்க பாகிஸ்தானின் சான்றிதழ் தேவைப்படுவது துரதிருஷ்டவசமானது - ஏக்நாத் ஷிண்டே


சிவசேனா யாருக்கு சொந்தம் என்பதை தீர்மானிக்க பாகிஸ்தானின் சான்றிதழ் தேவைப்படுவது துரதிருஷ்டவசமானது - ஏக்நாத் ஷிண்டே
x
தினத்தந்தி 24 April 2023 11:00 PM GMT (Updated: 24 April 2023 11:00 PM GMT)

உண்மையான சிவசேனா யாருடையது என்பதை தீர்மானிக்க பாகிஸ்தானின் சான்றிதழ் தேவைப்படுவது துரதிருஷ்டவசமானது என உத்தவ் தாக்கரேக்கு, முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பதிலடி கொடுத்துள்ளார்.

சிவசேனாவில் பிளவு

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய மகா விகாஸ் அகாடி அரசு. ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியால் கவிழ்ந்தது.இதைத்தொடர்ந்து சிவசேனா உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியாகவும், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மற்றொரு அணியாகவும் பிளவு பட்டது.

சிவசேனா கூட்டணி உடைந்த பிறகு உத்தவ் தாக்கரே அணிக்கு மிகப்பெரிய அடியாக தேர்தல் ஆணையம் சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணிக்கு ஒதுக்கியது.

கண்புரை நோய்

இந்தநிலையில் ஜல்காவ் மாவட்டத்தில் உள்ள பச்சோரா பகுதியில் நேற்று முன்தினம் உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே பொதுக்கூட்டத்தில் பேசினார்.அப்போது அவர், "மக்களிடம் இருந்து எனக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்தால், உண்மையான சிவசேனா யாருடையது என்பது பாகிஸ்தானுக்கும் தெரியவரும். ஆனால் கண்புரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் ஆணையத்தால் அதை அங்கீகரிக்க முடியவில்லை" என்றார்.

இந்தநிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தானேயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பேசியதாவது:-

உண்மையான சிவசேனா யாருடையது என்பது பாகிஸ்தானுக்கு கூட தெரியும் என்று ஜல்கானில் ஒருவர் பேசினார். சிவசேனா யாருடையது என்பதை தீர்மானிக்க பாகிஸ்தானின் சான்றிதழ் தேவைப்படுவது துரதிருஷ்டவசமானது மற்றும் சோகமானது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story