தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் வாழ்த்து
தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
கடந்த 19-ந் தேதி தொடங்கிய உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்திய நேரப்படி நேற்று இரவு 11.45 மணிக்கு ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி நடைபெற்றது.
அதில் நடப்பு உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தினார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார். நீரஜ் சோப்ரா தனது இரண்டாவது முயற்சியில் 88.17 மீட்டர் தூரம் எறிந்து உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் ஆனார். ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கமும், பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் வெள்ளியும், செக் குடியரசை சேர்ந்த யக்கூப் வெண்கலமும் வென்றனர். மற்ற இந்திய வீரர்களான டி.பி. மானு (6-வது இடம்) மற்றும் கிஷோர் ஜேனா (5-வது இடம்) பிடித்து டாப் 6 வீரர்களில் இடம் பெற்றனர்.
இந்நிலையில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "இந்திய தடகளத்தின் தங்க மகன் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் வெற்றி பெற்றார். உங்களின் சாதனைகளால் ஒட்டுமொத்த தேசமும் பெருமிதம் கொள்கிறது, இந்த தருணம் இந்திய விளையாட்டு வரலாற்றில் என்றென்றும் நினைவுகூரப்படும்" என்று அதில் அனுராக் தாக்கூர் பதிவிட்டுள்ளார்.