பிரதமர் மோடி சகாப்தத்திற்கு முன்பும்... பின்பும்... - வெளியுறவு கொள்கை பற்றி ஜெய்சங்கர்


பிரதமர் மோடி சகாப்தத்திற்கு முன்பும்... பின்பும்... - வெளியுறவு கொள்கை பற்றி ஜெய்சங்கர்
x
தினத்தந்தி 6 Jan 2024 1:39 AM GMT (Updated: 6 Jan 2024 5:54 AM GMT)

உறுதியான அதிகாரங்களை சமநிலைப்படுத்த இந்தியா போன்ற ஒரு நாட்டை உலகம் விரும்புகிறது என்று மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள பி.இ.எஸ். பல்கலைக்கழகத்தில் நடந்த பொன் விழா கொண்டாட்டத்தில் மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் அவர், தன்னுடைய 'ஒய் பாரத் மேட்டர்ஸ்' என்ற பெயரிலான புத்தகம் பற்றி பேசினார். அப்போது, பிரதமர் மோடி சகாப்தத்திற்கு முன் மற்றும் பின்னரான வெளியுறவு கொள்கைக்கு இடையேயான வித்தியாசம் பற்றிய கேள்விக்கு பதிலளித்தபோது, புதிய வழியில் சிந்திப்பது ஆகும் என கூறினார்.

நம்முடைய அண்டை நாட்டுக்காரர்கள் கல்வி மற்றும் சுகாதாரத்தில் இந்தியாவுடன் இன்றைய அளவில் கூட்டாக செயல்படுகின்றனர். புதிய அதிகார இணைப்பை அவர்கள் காண்கின்றனர். நம்முடைய வரலாற்றை நாம் மீண்டும் கைப்பற்றுகிறோம்.

தொல்லியல்ரீதியாக நாம் சென்றோம் என்றால், வியட்நாமில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில்கள் உள்ளன. வளைகுடாவை எடுத்து கொண்டால், 1960 மற்றும் 1970 ஆகிய ஆண்டுகள் வரை இந்த பகுதியிலுள்ள சில நாடுகளுடன், இந்திய பணத்திற்கு என்று சட்டப்படியான ஒப்பந்தம் இருந்தது.

இந்த தொடர்புகள் வழியே நாம் செல்ல வேண்டும். நம்மை பற்றி நாமே ஒரு குறுகிய பார்வையை கொண்டிருக்கிறோம் என்று அவர் பேசியுள்ளார்.

தொடர்ந்து அவர், உக்ரைன் மோதலை தொடர்ந்து வந்த நெருக்கடிகள் அல்லது இந்தோ-பசிபிக்கில் நடந்து வரும் விசயங்கள் போன்ற சிக்கலான விவகாரங்களில் இந்தியா ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தி, சீரான நிலையை நாம் ஏற்படுத்தி வருகிறோம் என்று கூறினார்.

நாம் நம்முடைய சிறகுகளை விரித்து பறக்கிறோம். உறுதியான அதிகாரங்களை சமநிலைப்படுத்துவதற்கு இந்தியா போன்ற ஒரு நாட்டை உண்மையில் உலகம் விரும்புகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story