உத்தரபிரதேசத்தில் ஆயிரம் ஜோடிகளுக்கு திருமணம்: யோகி ஆதித்யநாத் நடத்தி வைத்தார்


உத்தரபிரதேசத்தில் ஆயிரம் ஜோடிகளுக்கு திருமணம்: யோகி ஆதித்யநாத் நடத்தி வைத்தார்
x

கோப்புப்படம்

உத்தரபிரதேசத்தில் ஆயிரம் ஜோடிகளுக்கு மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் திருமணம் நடத்தி வைத்தார்.

கோரக்பூர்,

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் மாநில அரசு சார்பில் ஆயிரம் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு, ஆயிரம் ஜோடிகளுக்கும் திருமணம் செய்து வைத்து ஆசி வழங்கினார். ஜோடிகளில் அனைத்து மதம் மற்றும் சாதிகளை சேர்ந்தவர்களும் உள்ளனர். 14 ஜோடிகளுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கி, அவர்களுடன் யோகி ஆதித்யநாத் உரையாடினார். பின்னர், ஆயிரம் ஜோடிகளிடையே யோகி ஆதித்யநாத் பேசியதாவது:-

பொருளாதாரத்தில் நலிந்த இளம்பெண்கள், கவுரமாக திருமணம் செய்து கொள்வதற்காக, 2017-ம் ஆண்டு இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. முதலில், ஒவ்வொரு ஜோடிக்கும் ரூ.31 ஆயிரம் அளிக்கப்பட்டது. தற்போது, ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை 2 லட்சம் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இன்று விவாக பஞ்சமி. இந்த மங்கல நாளில்தான் ராமர்-சீதை திருமணம் நடந்தது. இத்தகைய புனித நாளில், ஆயிரம் ஜோடி திருமணத்தை பார்த்தது நமது அதிர்ஷ்டம். சமூகத்தில் நிலவும் கொடிய பழக்கங்களான குழந்தை திருமணம், வரதட்சணை ஆகியவற்றை ஒழிக்க நீங்கள் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் பலன்களை அளிக்க இரட்டை என்ஜின் அரசு உறுதி பூண்டுள்ளது என்று அவர் பேசினார்.


Next Story