உ.பி. இளம் பெண் நீதிபதி தூக்கு போட்டு தற்கொலை


உ.பி. இளம் பெண் நீதிபதி தூக்கு போட்டு தற்கொலை
x

அந்த அறையில் இருந்து சில ஆவணங்களும் மற்றும் தற்கொலை குறிப்பு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் படாவன் நகரில் நீதிபதிகளுக்கான காலனியின் முதல் தளத்தில் வசித்து வந்தவர் ஜோத்சனா ராய் (வயது 27). படாவன் கோர்ட்டில் இளநிலை நீதிபதியாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கோர்ட்டுக்கு அவர் இன்று காலை வரவேண்டும். ஆனால், அவர் பணிக்கு வரவில்லை. இதனால், அவருடைய சக நீதிபதிகள் தொலைபேசி வழியே அவரை அழைத்திருக்கின்றனர்.

இதற்கு, பதில் வராத நிலையில், அவர்கள் பெண் நீதிபதியின் வீட்டுக்கு நேரில் சென்றனர். அப்போது, அவருடைய வீட்டின் படுக்கையறை உள்புறம் பூட்டப்பட்டு இருந்தது.

இதன்பின்பு போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, பெண் நீதிபதி மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் காணப்பட்டார். இதனை பார்த்து சுற்றியிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த அறையில் இருந்து சில ஆவணங்களும் மற்றும் தற்கொலை குறிப்பு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். கடந்த ஆண்டு ஏப்ரல் 29-ந்தேதியில் இருந்து படாவன் நகரில் சிவில் நீதிபதியாக (இளநிலை பிரிவு) ராய் பணியமர்த்தப்பட்டார். இதற்கு முன் அயோத்தி நகரில் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றியவர்.

இதுபற்றி மூத்த போலீஸ் சூப்பிரெண்டு அலோக் பிரியதர்ஷி கூறும்போது, மன உளைச்சலால் அவர் பாதிக்கப்பட்டு இருக்க கூடும் என முதல் கட்ட விசாரணையின்படி தெரிகிறது. அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார்.


Next Story