குஜராத் ஐகோர்ட்டு நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி


குஜராத் ஐகோர்ட்டு நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி
x

கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கருவை கலைக்க அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஒத்திவைத்த குஜராத் ஐகோர்ட்டின் நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி வெளியிட்டு உள்ளது.

கற்பழிப்பால் பாதிக்கப்பட்டவர்

குஜராத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் கற்பழிப்புக்கு உள்ளாகி கர்ப்பமானார். அவரது 26 வார கருவை கலைக்க அனுமதி கேட்டு மாநில ஐகோர்ட்டில் கடந்த 7-ந் தேதி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை மறுநாள் விசாரித்த ஐகோர்ட்டு, பெண்ணின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு மருத்தவ குழுவுக்கு உத்தரவிட்டது. அதன்படி இளம்பெண்ணின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவ குழு 10-ந் தேதி அறிக்கை தாக்கல் செய்தது. இதை 11-ந் தேதி விசாரித்த ஐகோர்ட்டு, வழக்கை 12 நாட்களுக்கு பின், அதாவது வருகிற 23-ந் தேதி விசாரணைக்கு ஒத்திவைத்தது.

சிறப்பு அமர்வில் விசாரணை

இந்த விவகாரத்தில் ஒவ்வொரு நாளும் மதிப்பு மிக்கது என்பதால், பாதிக்கப்பட்ட பெண் சார்பில் வக்கீல் விஷால் அருண் மிஸ்ரா சுப்ரீம் கோர்ட்டை நாடினார். இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நாகரத்னா, உஜ்ஜால் பூயன் ஆகியோரை கொண்ட சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது குஜராத் ஐகோர்ட்டின் நடவடிக்கைக்கு நீதிபதிகள் அதிருப்தி வெளியிட்டனர். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அவசர உணர்வு இருக்க வேண்டும் எனவும், இந்த வழக்கை சாதாரண வழக்காக கருதி ஒத்திவைக்கும் "குறைவான மனப்பான்மை" இருக்கக்கூடாது என்றும் தெரிவித்தனர்.

நீதிபதிகள் கேள்வி

இந்த விவகாரத்தில் கடந்த 11-ந் தேதியே மருத்துவ குழு அறிக்கை வழங்கப்பட்டுள்ள நிலையில், எதற்காக 23-ந் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அதற்குள் எத்தனை நாட்கள் கடந்து விடும்? எனவும் கவலை தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கரு ஏற்கனவே 26 வாரம் கடந்திருக்கும் நிலையில், வழக்கு ஒத்திவைக்கப்பட்டதால் மதிப்பு மிக்க நாட்களை இழந்திருப்பதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

பின்னர், தற்போது 27 வார கருவாகி இருப்பதால், புதிதாக மருத்துவ பரிசோதனை செய்து இன்று மாலைக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், திங்கட்கிழமை முதல் வழக்காக இதை விசாரிப்போம் என்றும் அறிவித்தனர்.

மேலும் இது தொடர்பாக மாநில அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறையினருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்தியாவில் திருமணமான பெண்கள் மற்றும் கற்பழிப்பால் பாதிக்கப்பட்டவர்கள், சிறுமிகள், மாற்றுத்திறனாளிகள் போன்ற பிரிவினருக்கு அதிகபட்சமாக 24 வாரங்கள் வரை கருக்கலைப்புக்கு அரசு அனுமதிப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story