நர்மதா அணை திட்டத்திற்கு தடை போட்ட பெண்ணுடன் நடைபயணம்... ராகுல் காந்தியை சாடிய பிரதமர் மோடி


நர்மதா அணை திட்டத்திற்கு தடை போட்ட பெண்ணுடன் நடைபயணம்... ராகுல் காந்தியை சாடிய பிரதமர் மோடி
x

3 தசாப்தங்களாக நர்மதா அணை திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் தோள் மீது கைபோட்டபடி காங்கிரஸ் தலைவர் செல்கிறார் என ராகுல் காந்தியை பிரதமர் மோடி சாடியுள்ளார்.


ராஜ்கோட்,


182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. டிசம்பர் 1-ந்தேதி நடக்கும் முதல் கட்ட தேர்தலின்போது 89 தொகுதிகளுக்கும், டிசம்பர் 5-ந்தேதி 2-வது கட்ட தேர்தலின்போது 99 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடத்தப்படும்.

டிசம்பர் 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். குஜராத்தில், 1995-ம் ஆண்டு முதல் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பா.ஜ.க. இந்த முறையும் வெற்றியை தக்க வைத்து கொள்ளும் பணிகளில் இறங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை கைப்பற்ற போராடுகிறது. புதிதாக கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறது.

இந்த தேர்தலில் குஜராத் முதல்-மந்திரியான பூபேந்திர பட்டேல் கத்லோடியா தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். குஜராத் உள்துறை மந்திரி ஹர்ஷ் சாங்கவி மஜூரா தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.

ஜாம்நகர் வடக்கு தொகுதியில் இருந்து பா.ஜ.க. வேட்பாளராக கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் நடந்த பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பிரசார வேட்டையில் ஈடுபட்டார். அவர், தொண்டர்கள் மற்றும் மக்களின் முன் பரபரப்பு உரையாற்றினார். பிரதமர் மோடி பேசும்போது, காங்கிரஸ் தலைவர் ஒருவர், 3 தசாப்தங்களாக நர்மதா அணை திட்ட பணிகளை தடுத்து நிறுத்திய பெண்ணுடன் சேர்ந்து பாதயாத்திரையில் நடந்து செல்கிறார் என கூறியுள்ளார்.

நர்மதா ஆற்றின் மீது சர்தார் சரோவர் அணை கட்டுவதற்கு எதிராக மேதா பட்கர் உள்பட பல சமூக ஆர்வலர்கள் சட்ட ரீதியிலான தடைகளை ஏற்படுத்தினர் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

குஜராத்துக்கு பட்கர் தீங்கு செய்து விட்டார். உங்களிடம் ஓட்டு கேட்டு காங்கிரசார் வரும்போது, அவர்களிடம் நீங்கள், நர்மதா அணை கட்டுவதற்கு எதிராக இருந்தவர்களின் தோள் மீது கைபோட்டபடி பாதயாத்திரை சென்றீர்களே என கேளுங்கள் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

மராட்டியம் வழியே தற்போது காங்கிரஸ் பாதயாத்திரை கடந்து செல்லும் நிலையில், கடந்த வாரம் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் மேதா பட்கர் இணைந்து கொண்டார்.

கடந்த 2017-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட குஜராத்தின் சர்தார் சரோவர் அணை திட்டத்திற்கு எதிராக மேதா பட்கர் பிரசாரம் மேற்கொண்டார். நர்மதாவை காப்போம் என்ற பெயரிலான போராட்டத்தில் பட்கர் தலைமையேற்று நடத்தி சென்றார். இந்த அணையின் நீரானது ஆயிரக்கணக்கான பழங்குடி குடும்பங்களை புலம்பெயர்ந்து செல்ல செய்து விடும் என பட்கர் குற்றச்சாட்டு எழுப்பினார்.


Next Story