'காஷ்மீர் பண்டிட்டுகளின் அவலநிலை குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்' - காங்கிரஸ் கோரிக்கை


காஷ்மீர் பண்டிட்டுகளின் அவலநிலை குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் - காங்கிரஸ் கோரிக்கை
x

காஷ்மீர் பண்டிட்டுகளின் அவல நிலை குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

புதுடெல்லி,

காஷ்மீர் பண்டிட்டுகள் குறிவைத்து கொல்லப்படும் அவலம் காரணமாக, அவர்கள் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறுகிற நிலை உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.

அந்த பதிவில் அவர், "இந்த ஆண்டில் இதுவரை காஷ்மீரில் 30 பண்டிட்டுகள் குறிவைத்து கொல்லப்பட்டுள்ளனர். காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேற்றம் வேகம் எடுத்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி அரசு செய்த நல்ல பணிகளை பா.ஜ.க. சீரழித்து விட்டது. ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்கு முன்பாக பிரதமர் பெரிய விஷயங்களை பேசினார். தற்போது ஆட்சி அதிகாரத்தை அனுபவித்து வருகின்றனர். காஷ்மீர் பண்டிட்டுகள் தங்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக உள்ளனர்" என கூறி உள்ளார்.

இதையொட்டி காங்கிரஸ் கட்சி ஊடகத்துறையின் தலைவர் பவன் கெரா, டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

"பா.ஜ.க. ஆதரவுடன் மத்தியில் வி.பி.சிங் அரசு நடைபெற்றபோது, 1989-ல் முதன்முதலாக காஷ்மீர் பண்டிட்டுகள் இடம்பெயர்ந்தனர். 1986-ல் காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு எதிராக முதல் கலகம் நடந்தது. அப்போது மத்தியில் ராஜீவ் காந்தி அரசு இருந்தது. காஷ்மீர் பண்டிட்டுகள் நேஷனல் ஸ்டேடியத்தில் இருந்து ராஜீவ் அலுவலகம் நோக்கி நடந்து சென்றனர்.

அவர்கள் கூறியதை ராஜீவ் கேட்டார். குலாம் முகமது ஷா அரசு வீழ்த்தப்பட்டது. பூஜ்ஜிய சகிப்புத்தன்மை பற்றி பா.ஜ.க. பேசுகிறது, ஆனால் உண்மையில் அதன் அர்த்தம் என்ன என்பதை ராஜீவ் காந்தி காட்டினார்.

காஷ்மீரில் ஒரு நிகழ்ச்சியில் அரசின் 70 மந்திரிகள் கலந்து கொண்டனர். அவர்களில் ஒருவராவது காஷ்மீர் பண்டிட்டுகளின் முகாமுக்கு சென்றது உண்டா என்று கேளுங்கள். காஷ்மீர் பண்டிட்டுகளை முகாமுக்கு சென்று அணுக முடியாத நிலையில் இது என்ன நடவடிக்கை?

காஷ்மீர் பண்டிட் பணியாளர்கள் அவர்களது விருப்பத்துக்கு மாறாக பணிக்கு திரும்புமாறு மிரட்டப்படுகிறார்கள். கடந்த ஜனவரியில் இருந்து இப்போது வரை 30 காஷ்மீர் பண்டிட்டுகள் குறிவைத்து கொல்லப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் பண்டிட்டுகளின் அவலநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள் என்று மோடி அரசை கேட்கிறோம். கடந்த 8 ஆண்டுகளில் என்ன செய்யப்பட்டது, என்ன செய்யப்படவில்லை என்பதை அதில் குறிப்பிட வேண்டும்.

80 பேர் கொல்லப்பட்டதற்கு உங்களிடம் இருந்து பதில் வர வேண்டும். இது எப்படி இயல்பு நிலை ஆகும்? பதில் சொல்லுங்கள்."

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story