புதிய இந்தியாவின் தந்தை நாட்டுக்கு என்ன செய்து விட்டார்? பிரதமர் மோடி பற்றி நிதீஷ் குமார் கேள்வி


புதிய இந்தியாவின் தந்தை நாட்டுக்கு என்ன செய்து விட்டார்? பிரதமர் மோடி பற்றி நிதீஷ் குமார் கேள்வி
x

புதிய இந்தியாவின் தந்தை நாட்டுக்கு என்ன செய்து விட்டார்? என பிரதமர் மோடி பற்றி நிதீஷ் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.



மும்பை,


பா.ஜ.க.வை சேர்ந்த மராட்டிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா பட்னாவிஸ். இவர் தனியார் வங்கி ஒன்றில் நிர்வாகியாக உள்ளார். அம்ருதா பட்னாவிஸ் கடந்த டிசம்பர் 21-ந்தேதி நடந்த நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார்.

அப்போது அவரை பேட்டி எடுத்தவர், நீங்கள் கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியை நாட்டின் தேசப்பிதா என்று கூறி இருந்தீர்களே, அப்படி என்றால் மகாத்மா காந்தி யார்? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய அம்ருதா பட்னாவிஸ், நமக்கு 2 தேச பிதாக்கள் உள்ளனர். நரேந்திர மோடி புதிய இந்தியாவின் தந்தை, மகாத்மா காந்தி முந்தைய இந்தியாவின் தந்தை என்று குறிப்பிட்டார்.

இதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அம்ருதா பட்னாவிசின் கருத்துகளை மராட்டிய மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான யஷோமதி தாக்குர் கடுமையாக கண்டித்துள்ளார்.

அவர் கூறுகையில், பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களை பின்பற்றுபவர்கள் காந்தியை மீண்டும், மீண்டும் கொல்ல முயற்சிக்கின்றனர். பொய்களை திரும்ப, திரும்ப சொல்லி, காந்தி போன்ற மகான்களை அவமதிப்பதன் மூலம் வரலாற்றை மாற்றுவதற்காக அவர்கள் மோசமான செயல்களை செய்கின்றனர் என்று கூறினார்.

இந்த சூழலில், அம்ருதா பட்னாவிசின் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய பீகார் முதல்-மந்திரி நிதீஷ் குமார், தேச விடுதலைக்கான போராட்டத்தில் அவர்கள் எதுவும் செய்யவில்லை. இந்திய சுதந்திரத்திற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு எந்த பங்கும் ஆற்றவில்லை. புதிய இந்தியாவின் தந்தை என்பது பற்றி கேள்விபட்டோம்.

புதிய இந்தியாவின் தந்தை நாட்டுக்கு என்ன செய்து விட்டார்? என்று பிரதமர் மோடியை குறிப்பிடும் வகையில் கேள்வி எழுப்பினார்.

இதேபோன்று மராட்டிய காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே கூறும்போது, மகாத்மா காந்தியை யாருடனும் ஒப்பிட முடியாது என குறிப்பிட்டதுடன், அவர்களது (பா.ஜ.க.) புதிய இந்தியா ஒரு சில சூப்பர் பணக்கார நண்பர்களை உருவாக்கும். மீதமுள்ள மக்கள் வறுமையிலும், பசியிலும் இருப்பார்கள். எங்களுக்கு இந்த புதிய இந்தியா தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.


Next Story