உலகிற்கு இந்தியா கொடுத்தது யுத்தம் அல்ல புத்தர்: பிரதமர் மோடி உரை
டெல்லியில் நடந்த உலகளாவிய புத்த உச்சி மாநாட்டில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, புத்தரின் பாதை வருங்காலத்திற்கான பாதை என பேசியுள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் உலகளாவிய புத்த உச்சி மாநாடு 2 நாட்கள் நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். இந்த கூட்டத்தில் புத்த மத துறவிகளும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, கவுதம புத்தரின் உன்னதம் வாய்ந்த போதனைகள் பல நூற்றாண்டுகளாக எண்ணற்ற மக்களிடையே தாக்கம் ஏற்படுத்தி உள்ளது. கடவுள் புத்தரின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு, ஒருவருடைய அறிவுறுத்தலுக்காக காத்திருக்காமல், உலகளாவிய நலன்களுக்கான புதிய திட்ட பணிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
போர் மற்றும் அமைதியின்மையால் இன்றைய உலகம் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே புத்தர் ஒரு தீர்வு வழங்கியிருக்கிறார்.
உலகத்திற்கு இந்தியா வழங்கியது யுத்தம் (போர்) இல்லை. ஆனால் உலகிற்கு புத்தரை வழங்கி இருக்கிறது. புத்தரின் பாதையானது வருங்காலத்திற்கான பாதை மற்றும் நிலைத்தன்மைக்கான பாதை ஆகும் என அவர் பேசியுள்ளார்.