என்ன வகையான நட்பு இது...? அஞ்சலி தோழியிடம் விசாரிக்க வேண்டும்: மகளிர் ஆணையம் வலியுறுத்தல்


என்ன வகையான நட்பு இது...? அஞ்சலி தோழியிடம் விசாரிக்க வேண்டும்: மகளிர் ஆணையம் வலியுறுத்தல்
x

டெல்லியில் இளம்பெண் காரில் இழுத்து செல்லப்பட்ட விவகாரத்தில் உடன் சென்ற தோழியிடம் விசாரிக்க வேண்டும் என்று மகளிர் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.



புதுடெல்லி,


டெல்லியில் கஞ்சவாலா நகரில் சுல்தான்புரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஸ்கூட்டியில் சென்ற அஞ்சலி சிங் (வயது 20) என்ற இளம்பெண் மீது நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் கார் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. அவரது உடல் காரில் சிக்கியபடி பல கி.மீ. தொலைவுக்கு இழுத்து செல்லப்பட்ட கொடூர சம்பவம் நடந்து உள்ளது. இந்த சம்பவத்தில் கார் ஓட்டுனர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உத்தரவின்பேரில் இளம்பெண் மரணம் பற்றிய விரிவான அறிக்கையை அளிக்கும்படி டெல்லி காவல் துறை ஆணையரிடம் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. இதன்படி, டெல்லி போலீசில் சிறப்பு காவல் ஆணையாளராக உள்ள ஷாலினி சிங்கை விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டு கொண்டுள்ளது.

அஞ்சலிக்கு நடந்த பிரேத பரிசோதனை முடிந்துள்ளது. டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால், அஞ்சலி குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்து உள்ளார். இந்நிலையில், அஞ்சலியுடன் சம்பவத்தன்று, மற்றொரு பெண்ணும் பயணம் செய்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர். இதன்படி, அஞ்சலி பின்புறத்தில் அமர்ந்தும், நிதி என்ற அவரது தோழி ஸ்கூட்டியை ஓட்டியும் சென்றுள்ளார். இவர்கள் இருவரும் ஓட்டல் ஒன்றில் இருந்து வெளிவரும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளிவந்துள்ளன.

அதில், உயிரிழந்த இளம்பெண் அஞ்சலி மற்றும் அவரது தோழி நிதி இருவரும் அதிகாலை 1.30 மணியளவில் ஓட்டலை விட்டு வெளியே வருகின்ற காட்சிகள் இடம் பெற்று உள்ளன.

ஒன்றரை மணிநேரம் அவர்கள் பயணம் கடந்துபோன நிலையில், அதிகாலை 3 மணியளவில் விபத்து நடந்துள்ளது. அவர்கள் வீட்டுக்கு செல்ல இவ்வளவு நேரம் எடுத்து கொண்டனரா? அல்லது வேறு எங்கும் சென்றனரா? என்ற கேள்வியும் வழக்கின் முன் விடை கிடைக்காமல் உள்ளது. இந்த சூழலில், தோழிகள் இருவரும் குடிபோதையில் ஒருவருக்கு ஒருவர் தகராறில் ஈடுபட்டு உள்ளனர் என கூறப்படுகிறது.

இதனை அவர்கள் வெளியேறிய ஓட்டலின் உரிமையாளர் கூறிய தகவல் தெரிவிக்கின்றது. அவர்கள் இருவரும் குடிபோதையில் மோதி கொண்டனர். இதனால், சண்டை போட கூடாது என கூறினேன். அதன்பின் அவர்கள் இருவரும் நடந்து செல்லும்போதும் தகராறில் ஈடுபட்டு உள்ளனர். இதனையடுத்து, அவர்களை ஓட்டலை விட்டு வெளியேற்றினேன் என அவர் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், சம்பவத்தில் உயிரிழந்த அஞ்சலியின் தோழி லைவ் ஷோவில் தோன்றி பேசுகிறார். தனது கண் முன்னே தோழியை அவர்கள் கார் ஏற்றி கொன்றனர் என கூறுகிறார். இந்த தோழி, சம்பவம் நடந்த அந்த பகுதியில் இருந்து வெளியேறி, வீட்டுக்கு சென்றிருக்கிறார். என்ன வகையான நட்பு இது? அவர் அந்த இளைஞர்களை தடுத்து நிறுத்தவில்லை. போலீசாரிடம் கூறவில்லை. அஞ்சலியின் உறவினர்களிடமும் எதுவும் தெரிவிக்கவில்லை. நேராக வீட்டுக்கு சென்று உட்கார்ந்து கொண்டார். இதுபற்றியும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.


Next Story