இமாச்சலபிரதேசம், குஜராத் மாநிலங்களின் தேர்தல் தேதியை தனித்தனியாக அறிவித்தது ஏன்? - காங்கிரஸ் கேள்வி


இமாச்சலபிரதேசம், குஜராத் மாநிலங்களின் தேர்தல் தேதியை தனித்தனியாக அறிவித்தது ஏன்? - காங்கிரஸ் கேள்வி
x

கோப்புப்படம்

இமாச்சலபிரதேசம், குஜராத் மாநிலங்களின் தேர்தல் தேதியை தனித்தனியாக அறிவித்தது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் குஜராத் மாநில பொறுப்பாளர் ரகு சர்மா நேற்று காங்கிரஸ் தலைமையகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

பா.ஜனதா அரசின் நிர்பந்தத்தையும் மீறி, இறுதியாக குஜராத் சட்டசபை தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் கமிஷனுக்கு நன்றி. குஜராத் தேர்தல் தேதியை தாமதமாக அறிவித்ததால், அங்கு அரசு செலவில் கூட்டங்கள் நடத்த பா.ஜனதாவுக்கு போதிய அவகாசம் கிடைத்தது. அரசு எந்திரத்தை துஷ்பிரயோகம் செய்தது.

குஜராத், இமாசலபிரதேசம் மாநிலங்களில் ஓட்டு எண்ணிக்கை ஒரே நாளில் நடக்கிறது. அப்படியானால் தேர்தல் தேதி ஏன் தனித்தனியாக அறிவிக்கப்பட்டது என்பதற்கு அரசியல் சட்ட அமைப்பு என்ற முறையில் தேர்தல் கமிஷன் விளக்கம் அளிக்க வேண்டும். தொங்கு பாலம் விபத்தை தொடர்ந்து காங்கிரஸ் தனது அரசியல் நிகழ்ச்சிகளை ரத்து செய்தது. ஆனால் பிரதமர் மோடி தொடர்ந்து அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். குஜராத்தில் காங்கிரஸ் கடுமையாக உழைக்கிறது. தேர்தல் முடிவுகள் ஆச்சரியம் அளிக்கும்.

ஆம் ஆத்மியும், அகில இந்திய மஜ்லிஸ் கட்சியும் பா.ஜனதாவின் 'பி டீம்'கள். ஓட்டை பிளக்கவே போட்டியிடுகின்றன. பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையில்தான் நேரடி போட்டி நிலவுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story