நடுரோட்டில் திடீரென கார் கதவை திறந்த பெண்.. அடுத்து நடந்த விபரீதம்- வைரலாகும் வீடியோ
இந்த சம்பவம் மற்றொரு காரின் டேஷ்போர்டு கேமராவில் பதிவாக, அதை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பெங்களூரு:
சாலைகளில் செல்லும்போது கவனக்குறைவாக செய்யும் ஒருசில செயல்கள், விபத்துக்கு வழிவகுத்துவிடுகின்றன. அப்படி ஒரு விபத்து கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்துள்ளது.
சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு வாடகைக் கார் நடு ரோட்டில் நிற்க, உள்ளே இருந்த பெண் கார் கதவை திடீரென திறந்துள்ளார். அப்போது பின்னால் வந்த ஆட்டோ, அந்த கார் கதவின் மீது மோதியது. ஆட்டோ டிரைவர் உடனடியாக பிரேக் போட்டு நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஆட்டோ டிரைவர் கீழே இறங்கி, ஆட்டோவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதா என பார்வையிட்டார்.
இவ்வளவு நடந்தும் காரில் இருந்து இறங்கிய பெண், ஒன்றும் நடக்காததுபோல் கார் கதவை மூடிவிட்டு நடந்து சென்றுவிட்டார். இதனைப் பார்த்த ஆட்டோ டிரைவர் அந்த பெண்ணை பார்த்து கையை நீட்டி ஏதோ கூறிவிட்டு ஆட்டோவில் ஏறி புறப்பட்டு சென்றார். அதேசமயம், அந்த பெண் வந்த காரின் கதவும் சேதமடைந்ததால், சரியாக பூட்டவில்லை.
இந்த சம்பவம் மற்றொரு காரின் டேஷ்போர்டு கேமராவில் பதிவாக, அதை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. கார் டிரைவர் மற்றும் பெண் இருவரையும் குற்றம் சாட்டி கமெண்ட் பாக்சில் பலர் பதிவிட்டுள்ளனர். கதவைத் திறப்பதற்கு முன் பயணியை டிரைவர் எச்சரித்திருக்க வேண்டும் என்று சிலர் கூறியுள்ளனர். பெரும்பாலானவர்கள் அந்தப் பெண்ணின் கவனக்குறைவான செயலையே விமர்சனம் செய்தனர்.