மத்தியபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஹனிடிராப் வழக்கில் தேடப்பட்ட பெண் பெங்களூருவில் கைது


மத்தியபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஹனிடிராப் வழக்கில் தேடப்பட்ட பெண் பெங்களூருவில் கைது
x
தினத்தந்தி 13 Sep 2023 6:45 PM GMT (Updated: 13 Sep 2023 6:46 PM GMT)

மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஹனிடிராப் வழக்கில் தேடப்பட்ட பெண், திருட்டு வழக்கில் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு:

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் கடந்த 2019-ம் ஆண்டு நகராட்சி என்ஜினீயர் ஹர்பஜன் சிங் என்பவரை ஹனிடிராப் முறையில் மிரட்டி ரூ.3 கோடி பறித்த வழக்கில் சுவேதா, ஆர்த்தி தயாள், மேலும் 3 பெண்கள் உள்பட 6 பேரை அம்மாநில போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஆர்த்தி தயாள் மோசடி கும்பலுக்கு மூளையாக செயல்பட்டதும், ஹனிடிராப் முறையில் அந்த மாநில முன்னாள் முதல்-மந்திரி, அரசியல் கட்சி பிரமுகர்கள், போலீஸ் அதிகாரிகள் பலரை ஆபாச வலையில் வீழ்த்தி, அவர்கள் பெண்களுடன் நெருக்கமாக இருந்ததை செல்போனில் வீடியோவாக படம் பிடித்து பணம் பறித்ததும் தெரியவந்தது.

அதுமட்டுமல்லாமல் ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவிகளை ஆர்த்தி தயாள் விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைத்து அந்த மாநில அரசு உத்தரவிட்டது. அதன்படி விசாரணையை தொடங்கிய அந்த சிறப்பு விசாரணை குழுவினர், கைதானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை ஆய்வு செய்தனர்.

அப்போது அதில் ஆயிரத்துக்கும் அதிகமான ஆபாச வீடியோக்கள் மற்றும் நடிகர்கள், அரசியல் வாதிகள், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோரை ஹனிடிராப் முறையில் மிரட்டி எடுத்த வீடியோக்களும் இருந்தன. அவர்கள் கல்லூரி மாணவிகளை ஆசை வார்த்தை கூறி விபசாரத்தில் தள்ளியதும், அதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்ததும் தெரிந்தது.

மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்த்தி தயாள் கடந்த 2020-ம் ஆண்டு ஜாமீனில் வெளிவந்தார். இதையடுத்து அவர் தலைமறைவானார். இதனால் அவரை போலீசார் தேடி வந்தனர். ஆனால் அவர் பற்றி போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்காமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு மகாதேவபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தங்கும் விடுதியில் தங்கியிருந்த சக பெண்ணின் நகை, பணத்தை ஒரு பெண் திருடியிருந்தார். இதுபற்றிய புகாரின் பேரில் கைவரிசை காட்டிய பெண்ணை கைது செய்து போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில், நகை, பணத்தை திருடியதாக கைதானவர் மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த ஆர்த்தி தயாள் என்பதும், இவரை மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற ஹனிடிராப் வழக்கில் போலீசார் கைது செய்ததும், பின்னர் அந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவானதும் தெரியவந்தது.

அதன் பிறகு ஆர்த்தி தயாள் சென்னை, பெங்களூரு என பல்வேறு நகரங்களில் பதுங்கி இருந்து வந்துள்ளார். அந்த சமயங்களில் அவர் அங்குள்ள அழகுநிலையங்களில் பணி செய்ததுடன், அருகில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்து வந்துள்ளார். தன்னுடன் தங்கியிருக்கும் பெண்களின் நகை, பணத்தை திருடிவிட்டு 10 நாளில் அங்கிருந்து வேறு நகரங்களுக்கு செல்வதையும் அவர் வழக்கமாக வைத்திருந்ததும், அதுபோல் மகாதேவபுரா பகுதியில் தங்கும் விடுதியில் தங்கியிருந்த போது உடன் தங்கிய பெண்ணிடம் கைவரிசை காட்டிய போது போலீசில் சிக்கியதும் விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக மத்தியபிரதேச போலீசாருக்கு பெங்களூரு போலீசார் தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள், பெங்களூருவுக்கு வந்து ஆர்த்தி தயாளை கைது செய்து விசாரணைக்காக இந்தூருக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளனர்.


Next Story