பெண் உடலை தகன மேடையில் இருந்து வெளியே இழுத்து 5 பேர் பாலியல் வன்கொடுமை...!! உண்மை என்ன..?
ராஜஸ்தானில் தகன மேடையில் பாதி எரிந்த பெண் உடலை வெளியே இழுத்து, 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டனர் என்று செய்தி வெளியானது.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானில் சிகார் நகரில் தகன மேடையில் பாதி எரிந்து கொண்டிருந்த பெண்ணின் உடலை வெளியே இழுத்து, 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டனர் என்று சமூக ஊடகங்களில் செய்தி வெளியானது.
அதிர்ச்சி தரும் இந்த தகவலை பயனாளர்கள் பலரும் பகிர்ந்தனர். சமீபத்தில் வெளியான இந்த செய்தி போலியானது என தெரிய வந்து உள்ளது. பின்னர் இந்த செய்தியை வெளியிட்ட செய்தி நிறுவனம் அதனை நீக்கி விட்டது.
பாகிஸ்தானில் பாலியல் பலாத்கார கும்பலிடம் இருந்து பாதுகாக்க பெற்றோர், தங்களது மகளின் கல்லறைகளை பூட்டு போட்டு பாதுகாக்கின்றனர் என சமீபத்தில் ஒரு செய்தி வெளியானது.
இந்த நிலையில், ராஜஸ்தானை குறிப்பிட்டு இந்த செய்தி வெளிவந்து உள்ளது. இதுபற்றி உப்பசாலா பல்கலை கழகத்தில் பணியாற்றி வரும் பேராசிரியர் அசோக் ஸ்வைன் தனது டுவிட்டரில் செய்தி ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில், பலாத்கார கும்பலிடம் இருந்து பாதுகாக்க பாகிஸ்தானில் கல்லறையை பூட்டு போட்டு பூட்டுகின்றனர் என போலியான செய்தியை இந்திய ஊடகங்கள் பகிர்ந்து வரும் சூழலில், இந்தியாவில் சிகார் பகுதியில் இந்துகள் 5 பேர், தகன மேடையில் எரிந்த பெண்ணின் இறந்த உடலை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக கைது செய்யப்பட்டு உள்ளனர் என செய்தி வெளிவந்து உள்ளது என தெரிவித்து உள்ளார்.
இதன் உண்மை தன்மை பற்றி சிகார் நகர போலீசார் கூறும்போது, அந்த செய்தி அறிக்கையில் உண்மை இல்லை. அந்த பெண்ணின் உறவினர்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க அந்த பகுதிக்கு சென்று உள்ளனர்.
ஆனால், அவர்களை சமூக விரோதிகள் என அந்த பகுதி மக்கள் சிலர் தவறுதலாக நினைத்து அடித்து, தாக்கி விட்டனர். அஜித்கார் காவல் நிலைய போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று, தேவையான நடவடிக்கையை எடுத்தனர் என தெரிவித்தனர்.
எனினும், மற்றொரு செய்தி நிறுவனத்தில், தகன மேடையில் இருந்த பாதி எரிந்த பெண்ணின் உடலை வைத்து மந்திரி தந்திர வேலைகளில் ஈடுபட்ட 5 பேர் சிகார் பகுதியில் கைது செய்யப்பட்டனர் என தகவல் வெளியானது.
அந்த பெண்ணின் குடும்பத்தினர் அவர்களை அடித்து, நொறுக்கி விட்டனர் என்றும் தெரிவித்து இருந்தது. இந்த சம்பவம் பற்றி சிகார் போலீசார் விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.
சிகார் பகுதியில் இதுபோன்ற மாந்த்ரீக வேலைகள் நடைபெறும் பல வழக்குகள் வெளியான நிலையில், தகன மேடையில் எரியும் உடல்களை உள்ளூர்வாசிகள் தொடர்ந்து எச்சரிக்கையுடன் கவனிக்கின்றனர் என்றும் அந்த செய்தி தெரிவிக்கின்றது.