'பா.ஜனதா ஆட்சியில் மட்டுமே பெண்களுக்கு பாதுகாப்பு' - மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி உறுதி
பா.ஜனதா ஆட்சியில் மட்டுமே பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாக மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்.
ஹமிர்பூர்,
விரைவில் சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் இமாசல பிரதேசத்தில் பா.ஜனதா தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக ஹமிர்பூர் மாவட்டத்தில் நேற்று பெண்கள் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது.
இதில் பங்கேற்று பேசிய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி, பா.ஜனதா ஆட்சியில் மட்டுமே பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'இந்தியா முழுவதும் தேர்தல்களில் பெண்கள் மிகப்பெரிய பங்களிப்பை செய்து வருகின்றனர். அது இந்த தேர்தலிலும் தொடர்வதுடன், பா.ஜனதாவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த அவர்கள் உதவுவார்கள்' என்று நம்பிக்கை தெரிவித்தார்.
பா.ஜனதா அரசு பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியிருப்பதாக கூறிய ஸ்மிரிதி இரானி, மாவட்ட பஞ்சாயத்து, ஒன்றியம், கிராம பஞ்சாயத்துகளிலும் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் போன்ற உயர் பதவிகளில் பெண்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.
பிரதமர் மோடி தேசிய அரசியலுக்கு புதிய பார்வையை அளித்து, தேசத்தின் பெண்களை கவனித்து, மரியாதை அளித்து வருவதாகவும் புகழாரம் சூட்டினார்.