மராட்டிய நெடுஞ்சாலையில் உலகின் முதல் மூங்கில் சாலை தடுப்பு - மத்திய மந்திரி நிதின் கட்காரி தகவல்


மராட்டிய நெடுஞ்சாலையில் உலகின் முதல் மூங்கில் சாலை தடுப்பு - மத்திய மந்திரி நிதின் கட்காரி தகவல்
x

மராட்டியத்தில் உலகின் முதல் மூங்கில் சாலை தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.

மூங்கில் சாலை தடுப்பு

சாலை தடுப்புகள் இரும்பால் அமைக்கப்படுகின்றன. பல இடங்களில் தடுப்பு சுவர்களும் கட்டப்பட்டு உள்ளன. உலகிலேயே முதல் முறையாக மராட்டிய மாநிலத்தில் சந்திராப்பூர் மற்றும் யவத்மால் மாவட்டங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில் மூங்கில் கொண்டு சாலை தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

தற்சார்பு இந்தியா இலக்கில் அசாதாரண சாதனையை செய்து இருக்கிறோம். உலகில் முதல் 200 மீட்டர் நீள மூங்கில் சாலை தடுப்பை வாணி-வரோரா நெடுஞ்சாலையில் அமைத்து இருக்கிறோம்.

பெயர் 'பாகுபலி'

மூங்கில் சாலை தடுப்புக்கு 'பாகுபலி' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது இந்தூரில் உள்ள தேசிய வாகன சோதனை தளம் உள்பட அரசு அமைப்புகளில் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ரூர்க்கியில் உள்ள மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட தீ தடுப்பு சோதனையில் முதல் தரம் பெற்று உள்ளது. கூடுதலாக இந்திய ரோடு காங்கிரசாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மூங்கில் தடுப்பு மறுசுழற்சி சதவீதம் 50 முதல் 70 ஆகும். ஆனால் இரும்பு தடுப்புகளின் மறுசுழற்சி சதவீதம் 30 முதல் 50 ஆகும். பம்புசா பால்கோ ரக மூங்கில் கொண்டு இந்த தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனை இந்தியாவுக்கும், நாட்டின் மூங்கில் துறைக்கும் குறிப்பிடத்தகுந்ததாகும். மூங்கில் தடுப்புகள், இரும்பு தடுப்புகளுக்கு மாற்றாக அமைந்து உள்ளன. சுற்றுச்சூழலுக்கு ஏற்றது. மேலும் இது கிராமப்புற மற்றும் விவசாயிகளுக்கு நலன்தரக்கூடியதாக இருப்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக அமைந்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story