காஷ்மீரில் உலகின் மிக உயரமான ரெயில்வே பாலம் - விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என தகவல்


காஷ்மீரில் உலகின் மிக உயரமான ரெயில்வே பாலம் - விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என தகவல்
x

செனாப் ரெயில்வே பாலம் ஈபிள் டவரை விட 35 மீட்டர் உயரம் கொண்டது.

ஸ்ரீநகர்,

உலகிலேயே உயரமான பாலமாக கருதப்படும் செனாப் ரெயில்வே பாலம், ஒரு பொறியியல் அதிசயமாக கருதப்படுகிறது. ஈபிள் கோபுரத்தையும் விட உயரமான இந்த பாலத்தின் பணி முடிவடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாலம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள ரியாசி மாவட்டத்தில் ஓடும் செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. அங்குள்ள கவுரி கிராமத்திற்கு அருகில் சலால் அணை அமைந்திருக்கிறது. அந்த அணையின் அருகே இரு மலை முகடுகளுக்கு இடையே பிரமாண்டமான கட்டமைப்புடன் 'செனாப் பாலம்' உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செனாப் ரெயில்வே பாலம் ஈபிள் டவரை விட 35 மீட்டர் உயரம் கொண்டது. அதாவது ஈபிள் டவரின் உயரம் 324 மீட்டர். செனாப் ரெயில்வே பாலம் 359 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படுகிறது.

தற்போது உலகின் மிக உயரமான ரெயில்வே பாலம் சீனாவின் குய்சோ மாகாணத்தில் பெபன்ஜியாங் ஆற்றின் மீது 275 மீட்டர் உயரத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. செனாப் ரெயில்வே பாலம் பயன்பாட்டுக்கு வரும்போது அது உலகின் மிக உயரமான ரெயில்வே பாலம் என்ற பெருமையை பெற்று விடும்.

'செனாப் பாலம்' 359 மீட்டர் உயரமும், 1315 மீட்டர் நீளமும் கொண்டது ஆகும். உதம்பூர் - ஸ்ரீநகர் - பாரமுல்லா ரயில்வே இணைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.28,000 கோடி மதிப்பீட்டில் வடக்கு ரெயில்வே மூலம் கட்டப்படுகிறது.

இந்த பாலத்தின் ஆயுட்காலம் குறைந்தபட்சம் 120 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. பாலத்தின் மேல் 100 கி.மீ., வேகத்தில் ரெயில்கள் செல்லும் வகையில் கட்டமைக்கப்படுகிறது. இந்த பாலம் கடுமையான நிலநடுக்கத்தைத் தாங்கும் திறன் கொண்டது. இந்த பாலத்தின் உறுதித்தன்மை சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு, விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.


Next Story