ம.பி-யில் விபத்துக்குள்ளான விமானப்படை விமானங்களின் சிதைவுகள் 100கி.மீ. தொலைவில் கண்டுபிடிப்பு !
மத்தியப் பிரதேசத்தில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான இரண்டு போர் விமானங்கள் விபத்துக்குள்ளாகின.
போபால்,
மத்தியப் பிரதேசத்தில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான இரண்டு போர் விமானங்கள் விபத்துக்குள்ளாகின. விமானப் படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நடைபெற்றுள்ளது. விபத்துக்குள்ளான விமானங்களில் ஒன்று சுகோய் 30 ரக விமானம் என்றும் மற்றொன்று மிராஜ் 2000 ரக போர் விமானம் என்பதும் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் விமானி ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு விமானிகள் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விமான விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தின் மொரேனாவில் விபத்துக்குள்ளான போர் விமானங்களின் சிதைவுகள் விபத்து நடந்த இடத்திலிருந்து 100 கிமீ தொலைவில் ராஜஸ்தானின் பரத்பூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.