எடியூரப்பா- டி.கே.சிவக்குமார் திடீர் சந்திப்பு


எடியூரப்பா- டி.கே.சிவக்குமார் திடீர் சந்திப்பு
x
தினத்தந்தி 4 Aug 2023 6:45 PM GMT (Updated: 4 Aug 2023 6:46 PM GMT)

பெங்களூரு விமான நிலையத்தில் எடியூரப்பா-டி.கே.சிவக்குமார் திடீரென்று சந்தித்து பேசினர். அவர்கள் பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டனர்.

தேவனஹள்ளி:

பெங்களூரு விமான நிலையத்தில் எடியூரப்பா-டி.கே.சிவக்குமார் திடீரென்று சந்தித்து பேசினர். அவர்கள் பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டனர்.

ஆட்சியை கவிழ்க்க சதி

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினருமான எடியூரப்பா துபாய்க்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அதுபோல் முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதாதளம் (எஸ்) கட்சி மூத்த தலைவருமான குமாரசாமி ஐரோப்பிய நாடுகளுக்கு குடும்பத்தினருடன் இன்ப சுற்றுலா சென்றிருந்தார்.

இருவரும் ஒரே சமயத்தில் வெளிநாடு பயணம் மேற்கொண்டதால், கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரும் சிங்கப்பூரில் இருந்து கொண்டு காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி செய்வதாக கர்நாடக துணை முதல்-மந்திரியும், காங்கிரஸ் மாநில தலைவருமான டி.கே.சிவக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தார்.

எடியூரப்பா-டி.கே.சிவக்குமார் சந்திப்பு

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு குமாரசாமி, குடும்பத்தினருடன் பெங்களூருவுக்கு விமானம் மூலம் வந்தார். அதுபோல் எடியூரப்பாவும் நேற்று காலை தேவனஹள்ளி விமான நிலையத்திற்கு விமானத்தில் வந்திறங்கினார். அதே சமயத்தில் டெல்லியில் நடந்த காங்கிரஸ் மேலிட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், கடந்த 2-ந்தேதி புறப்பட்டு சென்றார். இந்த கூட்டம் முடிந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் கர்நாடக அரசின் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக மத்திய மந்திரி நிதின்கட்காரி உள்ளிட்ட மத்திய மந்திரிகளை சந்தித்து பேசியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா விமான நிலையத்திற்கு டி.கே.சிவக்குமார் வந்தார். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த போது அவர், எடியூரப்பாவை சந்தித்தார். எடியூரப்பா காரில் ஏறி புறப்பட தயாரானார். அப்போது டி.கே.சிவக்குமார் காரின் அருகில் சென்று எடியூரப்பாவுடன் கைகுலுக்கி கொண்டார்.

இருவரும் பரஸ்பரமாக நலம் விசாரித்து கொண்டனர். அதைத்தொடர்ந்து இருவரும் அங்கிருந்து தங்களது காரில் புறப்பட்டு பெங்களூருவுக்கு சென்றனர்.


Next Story