மே. வங்காளம்- வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: மத்திய மந்திரி வீட்டு முன் திரிணாமுல் காங்கிரசார் போராட்டம்


மே. வங்காளம்- வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: மத்திய மந்திரி வீட்டு முன் திரிணாமுல் காங்கிரசார் போராட்டம்
x

அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாநில போலீசாருடன் இணைந்து மத்திய படையினரும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் வங்காளதேச எல்லை பகுதியான தின்கடாவில் கடந்த டிசம்பர் மாதம் கால்நடை கடத்துபவராக கருதி பிரேம்குமார் பர்மன் (வயது 24) என்ற வாலிபரை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அப்பாவி இளைஞரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று திரிணாமுல் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூச்பெகர் மாவட்டத்தின் பெடாகுரியில் உள்ள மத்திய உள்துறை இணை மந்திரி நிஷித் பிரமாணிக்கின் வீட்டுக்கு முன்பு ஏராளமான தொண்டர்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநில மந்திரியும், தின்கடா தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான உதயன் குகா மற்றும் முன்னாள் மந்திரிகள் பரேஸ் அதிகாரி, பினோய் பர்மன் உள்பட ஏராளமான நிர்வாகிகளும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாநில போலீசாருடன் இணைந்து மத்திய படையினரும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த போராட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story