கடூரில் ஒய்.எஸ்.வி.தத்தா சுயேச்சையாக போட்டி


கடூரில் ஒய்.எஸ்.வி.தத்தா சுயேச்சையாக போட்டி
x

காங்கிரசில் டிக்கெட் கிடைக்காத நிலையில் கடூரில் ஆதரவாளர்களுடன் ஒய்.எஸ்.வி. தத்தா ஆலோசனை நடத்தினாா். அப்போது அவர் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சிக்கமகளூரு:

காங்கிரசில் டிக்கெட் கிடைக்காத நிலையில் கடூரில் ஆதரவாளர்களுடன் ஒய்.எஸ்.வி. தத்தா ஆலோசனை நடத்தினாா். அப்போது அவர் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சட்டசபை தேர்தல்

கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (மே) 10-ந்தேதி நடைபெறுகிறது. இதனால் கர்நாடகத்தில் காட்சி தாவல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஒய்.எஸ்.வி. தத்தா கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஜனதா தளம் (எஸ்) கட்சியில் இருந்து விலகினார். பின்னர் அவர் காங்கிரசில் இணைந்தார்.

மேலும் வருகிற சட்டசபை தேர்தலில் கடூர் தொகுதியில் தனக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என காங்கிரஸ் மேலிடத்திடம் அவர் கேட்டு இருந்தார். அவருக்கு டிக்கெட் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில் காங்கிரசின் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதில், கடூர் தொகுதியில் லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவரை வேட்பாளராக காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது. டிக்கெட் கிடைக்கும் என்று எதிர்பார்த்த ஒய்.எஸ்.வி.தத்தா அதிருப்தி அடைந்தார்.

ஆதரவாளர்களுடன் ஆலோசனை

பின்னர் ஒய்.எஸ்.வி.தத்தாவிடம் காங்கிரஸ் கட்சியினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ஒய்.எஸ்.வி.தத்தா சமாதானம் அடையவில்லை என தெரிகிறது. இந்தநிலையில் ஒய்.எஸ்.வி.தத்தா தனது ஆதரவாளர்களுடன் கடூரில் உள்ள திருமண மண்டபத்தில் ஆலோசனை நடத்தினார். இதில் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஒய்.எஸ்.வி.தத்தா எடுக்கும் முடிவுக்கு ஆதரவு அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் கடூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேண்டும் என்றும் ஆதரவாளர்கள் ஒய்.எஸ்.வி.தத்தாவை ஆதரவாளர்கள் வலியுறுத்தினர்.

சுயேச்சையாக போட்டியிட முடிவு

அவ்வாறு சுயேச்சையாக போட்டியிட்டால் உங்களை வெற்றி பெற வைப்போம் என்றும் அவர்கள் கூறினர். ஆதரவாளர்கள் கூறியதையடுத்து ஒய்.எஸ்.வி.தத்தா, கடூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் ெவளியாகி உள்ளது.

இதையடுத்து ஒய்.எஸ்.வி.தத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்றார். இதனால் அந்தப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒய்.எஸ்.வி.தத்தா சுயேச்சையாக நிற்க உள்ள நிலையில் காங்கிரசுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்.


Next Story