முதல்-மந்திரி சித்தராமையாவுடன் காண்டிராக்டர்கள் சங்க தலைவர் சந்திப்பு


முதல்-மந்திரி சித்தராமையாவுடன் காண்டிராக்டர்கள் சங்க தலைவர் சந்திப்பு
x
தினத்தந்தி 14 Oct 2023 6:45 PM GMT (Updated: 14 Oct 2023 6:46 PM GMT)

முதல்-மந்திரி சித்தராமையாவை சந்தித்த காண்டிராக்டர்கள் சங்க தலைவர் கெம்பண்ணா, பாக்கியை உடனே விடுவிக்குமாறு கோரினார்.

பெங்களூரு:

முதல்-மந்திரி சித்தராமையாவை சந்தித்த காண்டிராக்டர்கள் சங்க தலைவர் கெம்பண்ணா, பாக்கியை உடனே விடுவிக்குமாறு கோரினார்.

பாக்கி பட்டுவாடா

முதல்-மந்திரி சித்தராமையாவை கர்நாடக காண்டிராக்டர்கள் சங்க தலைவர் கெம்பண்ணா பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது காண்டிராக்டர்களுக்கு வழங்க வேண்டிய பாக்கித்தொகையை உடனே விடுவிக்குமாறு கோரினார். இதுகுறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக சித்தராமையா உறுதியளித்தார்.இந்த சந்திப்புக்கு பிறகு கெம்பண்ணா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் மற்றும் சில அதிகாரிகள், காண்டிராக்டர்களிடம் பணம் கேட்கிறார்கள். இதுகுறித்து முதல்-மந்திரியிடம் எடுத்துக் கூறினேன். சில துறைகளின் அதிகாரிகள் காண்டிராக்டர்களை மிக மோசமாக நடத்துகிறார்கள். காண்டிராக்டர்களுக்கு பாக்கியை பட்டுவாடா செய்வதாக முதல்-மந்திரி உறுதியளித்துள்ளார். ஆனால் எவ்வளவு பாக்கியை விடுவிப்பார்கள் என்று தெரியவில்லை.

ரூ.22 ஆயிரம் கோடி

கடந்த 5 மாதங்களாக பாக்கித்தொகையை விடுவிக்கவில்லை. இதனால் எங்களுக்கு பெரிய அளவில் தொந்தரவு ஏற்பட்டுள்ளது. குமாரசாமி கூறியுள்ள குற்றச்சாட்டு பற்றி எனக்கு தெரியாது. காண்டிராக்டர்களுக்கு மாநில அரசிடம் இருந்து வரவேண்டிய பாக்கி தொகை ரூ.22 ஆயிரம் கோடி ஆகும். இந்த பாக்கித்தொகையை பெறும் வரை நாங்கள் ஓய மாட்டோம்.

இவ்வாறு கெம்பண்ணா கூறினார்.


Next Story