தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து கவலை இல்லை-துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி


தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து கவலை இல்லை-துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
x

காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து கர்நாடகத்திற்கு கவலை இல்லை என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:-

டி.கே.சிவக்குமார் ஆலோசனை

பெங்களூரு விதானசவுதாவில் நேற்று கர்நாடக நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து துணை முதல்-மந்திரியும், நீர்ப்பாசன துறை மந்திரியுமான டி.கே.சிவக்குமார் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், வனத்துறை மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே, முன்னாள் முதல்-மந்திரி சதானந்த கவுடா, டி.கே.சுரேஷ் எ.பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் காவிரி, கிருஷ்ணா, மகதாயி நதிநீர் உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. குறிப்பாக பெங்களூரு திப்ப கொண்டனஹள்ளி ஏரியில் பாதுகாக்கப்பட்ட பகுதியின் பரப்பளவை குறைத்திருப்பது குறித்து அதிகாரிகளுடன் டி.கே.சிவக்குமார் ஆலோசனை நடத்தினார்.

தனித்தீர்மானம் நிறைவேற்றம்

ஆலோசனை கூட்டம் முடிந்ததும் காவிரி நதிநீர் விவகாரத்தில் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானத்தை கொண்டு வந்து ஒருமனதாக நிறைவேற்றி இருந்தது குறித்து துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு பதிலளித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எந்த கவலையும் இல்லை

காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு என்ன தீர்மானம் வேண்டுமானாலும் நிறைவேற்றி கொள்ளட்டும். அதுபற்றி நான் எந்த கருத்தோ, பதிலோ கூற விரும்பவில்லை. காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடக அரசு, இதுவரை நமது விவசாயிகளை பாதுகாத்து வந்துள்ளது. எனவே தமிழ்நாடு அரசு நிறைவேற்றி உள்ள தீர்மானம் குறித்து எந்த கவலையும் இல்லை. அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்.

மாநிலத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது. வறட்சி பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு நடத்திவிட்டு சென்றுள்ளனர். பெங்களூருவில் நேற்று (நேற்று முன்தினம்) தான் கனமழை பெய்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இன்னும் மழை பெய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story