ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் பெற்ற கர்நாடக வீரர்களுக்கு சித்தராமையா பாராட்டு


ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் பெற்ற கர்நாடக வீரர்களுக்கு சித்தராமையா பாராட்டு
x

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் பெற்ற கர்நாடக வீரர்களை பாராட்டிய முதல்-மந்திரி சித்தராமையா அவர்களுக்கு ரொக்கப்பரிசும் வழங்கினார்.

பெங்களூரு:

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் பெற்ற கர்நாடக வீரர்களை பாராட்டிய முதல்-மந்திரி சித்தராமையா அவர்களுக்கு ரொக்கப்பரிசும் வழங்கினார்.

வாழ்த்து பெற்றனர்

சமீபத்தில் ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் 107 பதக்கங்களை பெற்று சாதனை படைத்தனர். இதில் கர்நாடகத்தை சேர்ந்த 7 வீரர்கள் 8 பதக்கங்களை பெற்றனர். அதாவது ராஜேஸ்வரி கெய்க்வாட்(கிரிக்கெட்-தங்கம்), ரோகன் போபண்ணா(டென்னிஸ்-தங்கம்), மிஜோ சாகோ குரியன்-நிகால் ஜோயல்(ஓட்டப்பந்தயம்-தங்கம்), மிதுன் மஞ்சுநாத்(பூப்பந்து-வெள்ளி), சாய் பிரதீக்(பூப்பந்து-வெள்ளி), திவ்யா(துப்பாக்கி சுடுதல்-2 வெள்ளி) ஆகியோர் பதக்கம் பெற்றனர்.

பதக்கம் பெற்ற வீரர்-வீராங்கனைகள் நேற்று முதல்-மந்திரி சித்தராமையாவை பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது அவர்களுக்கு சித்தராமையா ரொக்கப்பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கி பாராட்டினார். அவர்கள் மத்தியில் சித்தராமையா பேசியதாவது:-

பரிசுத்தொகை அறிவித்தேன்

விளையாட்டு வீரர்கள் அதிக பதக்கங்களை பெற்று நாட்டுக்கும், கர்நாடகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். அனைத்து கன்னடர்களுக்கும் பெருமையான விஷயம். கடந்த முறையை காட்டிலும் இந்த முறை இந்திய வீரர்கள் 107 பதக்கங்களை பெற்றுள்ளனர். மக்கள்தொகையில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. ஆசிய விளையாட்டு போட்டியில் நாம் 2, 3-வது இடத்தை பெற்றால் நமக்கான பெருமை அதிகரிக்கும்.

விளையாட்டுத்துறையை ஊக்கப்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளது. நான் முன்பு முதல்-மந்திரியாக இருந்தபோது தேசிய, சர்வதேச போட்டிகளில் பதக்கம் பெறும் வீரர்களுக்கு பரிசுத்தொகையை அறிவித்தேன். நாட்டிலேயே கர்நாடகம் தான் அதிக பரிசுத்தொகையை வழங்குகிறது. இந்த முறை கர்நாடகத்தை சேர்ந்த 8 வீரர்கள் பதக்கம் பெற்றுள்ளனர். சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்வது சாதாரண விஷயம் அல்ல.

3 சதவீத இட ஒதுக்கீடு

இதற்கு தீவிரமான முயற்சிகள் தேவை. நீங்கள் சிறப்பான சாதனையை படைத்துள்ளீர்கள். வருகிற ஒலிம்பிக் போட்டியிலும் நீங்கள் பதக்கம் வெல்ல வேண்டும் என்று வாழ்த்துகிறேன். விளையாட்டு வீரர்களுக்கு போலீஸ் மற்றும் வனத்துறை வேலை வாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பிற துறைகளில் 2 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.


Next Story