பால்கர் அருகே ரசாயன ஆலை வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் பலி- 12 பேர் படுகாயம்


பால்கர் அருகே ரசாயன ஆலை வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் பலி- 12 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 27 Oct 2022 6:45 PM GMT (Updated: 27 Oct 2022 6:45 PM GMT)

பால்கர் அருகே ரசாயன ஆலையில் கொள்கலன் வெடித்து 3 தொழிலாளிகள் பலியாகினர். மேலும் 12 தொழிலாளிகள் படுகாயம் அடைந்தனர்.

வசாய்,

பால்கர் அருகே ரசாயன ஆலையில் கொள்கலன் வெடித்து 3 தொழிலாளிகள் பலியாகினர். மேலும் 12 தொழிலாளிகள் படுகாயம் அடைந்தனர்.

ரசாயன ஆலை

பால்கர் மாவட்டம் பொய்சர் அருகே தாராப்பூர் எம்.ஐ.டி.சி.யில் பிளாட் நம்பர் டி-17 பகுதியில் பாஜெரியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்ற ரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று முன்தினம் காமா அமிலம் யூனிட்டில் 18 தொழிலாளிகள் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.

அப்போது மாலை 4.20 மணி அளவில் காமா அமிலத்தை, சோடியம் சல்பேட் அம்மோனியாவுடன் கலக்கும் பணி நடந்த போது, திடீரென காமா அமிலம் நிரப்பி இருந்த கொள்கலன் திடீரென வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டது.

3 பேர் பலி

இதில், அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த 18 தொழிலாளிகளில் 3 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினர். மேலும் 12 பேர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த 12 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பலியான 3 பேரின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பலியானவர்களில் பொய்சரை சேர்ந்த கோபால் சிசோடியா (வயது27), கர்ஜத்தை சேர்ந்த பங்கஜ் யாதவ்(32) ஆகிய 2 பேரின் பெயர் விவரம் தெரியவந்தது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கொள்கலனில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது.


Next Story