பருவமழையின் போது மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படும்- கொங்கன் ரெயில்வே அறிவிப்பு


பருவமழையின் போது மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படும்- கொங்கன் ரெயில்வே அறிவிப்பு
x

கொங்கன் ரெயில்வே வழித்தடத்தில் பருவமழையின் போது மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் ரெயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது வருகிற 10-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாவட்ட செய்திகள்

மும்பை,

கொங்கன் ரெயில்வே வழித்தடத்தில் பருவமழையின் போது மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் ரெயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது வருகிற 10-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பாதுகாப்பு முன்னேற்பாடுகள்

கொங்கன் வழித்தடத்தில் பருவமழையை யொட்டி பாதுகாப்பு முன்ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கொங்கன் ரெயில்வே விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

740 கி.மீ. நீளமுடைய கொங்கன் வழித்தடத்தில் வெள்ளநீர் தேங்காமல் இருக்க வடிகால் சுத்தம் செய்யும் பணி நிறைவு பெற்று உள்ளது. பாறாங்கல், மண் சரிவு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ரெயில்கள் பாதுகாப்பாக இயங்குவதை உறுதி செய்ய சுமார் 846 பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். அபாயகரமான பகுதிகளில் 24 மணி நேரம் கண்காணிக்க காவலாளிகள் பணியில் உள்ளனர்.

40 கி.மீ வேகத்தில் இயங்கும்

அவசர காலத்தில் உதவிகள் விரைவில் கிடைக்க மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். கனமழை பெய்யும் வேளையில் ரெயில்களை 40 கி.மீ. வேகத்தில் இயக்க லோகா பைலட்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த கட்டுப்பாடுகள் வருகிற 10-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரை அமலில் இருக்கும்.

அவசர மருத்துவ வேன்கள், ஆபரேஷன் தியேட்டர் அடங்கிய வாகனங்கள் ரத்னகிரி, வொர்னா ஆகிய இடங்களில் நிறுத்தி வைக்கப்படும். அவசர காலத்தில் கட்டுப்பாட்டு அலுவலகத்தை தொடர்பு கொள்ள அனைத்து பாதுகாப்பு பிரிவு ஊழியர்களுக்கு செல்போன், சாட்டிலைட் போன்கள், வாக்கி டாக்கி வழங்கப்பட்டு உள்ளது. சிக்னல் கம்பங்கள் எல்.இ.டி. விளக்குகளால் மாற்றப்பட்டு உள்ளது.

மழை மானிட்டர்கள்

இதைத்தவிர 9 ரெயில் நிலையங்களில் தானியங்கி மழையளவு மானிட்டர்கள் பொருத்தப்பட்டு உள்ளது. மழைப்பொழிவு அதிகரித்தால் பாலத்தில் வெள்ள அபாய எச்சரிக்கையை அதிகாரிகள் அறிய முடியும். மழைக்காலத்தில் பயணிகள் பாதுகாப்பான பயணம் செய்வதை உறுதி செய்ய கொங்கன் ரெயில்வே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story