விமான நிலையத்தில் கல்லூரி மாணவர் ஓட்டி வந்த கார் மோதி மத்திய படை வீரர் பலி
மும்பை விமான நிலையத்தில் கல்லூரி மாணவர் வேகமாக ஓட்டி வந்த சொகுசு கார் மோதி மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் பலியானார்.
மும்பை,
மும்பை விமான நிலையத்தில் கல்லூரி மாணவர் வேகமாக ஓட்டி வந்த சொகுசு கார் மோதி மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் பலியானார்.
வீரர் மீது மோதிய கார்
மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் (சி.ஐ.எஸ்.எப்) ராகுல் சர்மா. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரத்தில் மும்பை சர்வதேச விமான நிலையத்தின் பறக்கும் சாலை சோதனை சாவடியில் பணியில் இருந்தார். விமான நிலையத்தின் பயணிகள் புறப்படும் பகுதியில் இருந்து பயணிகள் வருகை தரும் பகுதிக்கு செல்ல அனுமதி கிடையாது. இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் தடையை மீறி ஒரு கார், பயணிகள் புறப்படும் பகுதியில் இருந்து (அரைவல்), வருகை (டிப்பாச்சர்) பகுதிக்கு செல்ல முயன்றது. காரை ஓட்டிச்சென்ற வாலிபர் சோதனை சாவடியின் பிளாஸ்டிக் தடுப்பை இடித்து கொண்டு உள்ளே செல்ல முன்றார். அப்போது கார் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சி.ஐ.எஸ்.எப். வீரர் ராகுல் சர்மா மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயம் அடைந்தார்.
கல்லூரி மாணவர் கைது
சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த மற்றொரு வீரர் காரை ஓட்டி வந்த வாலிபர் மற்றும் அதில் இருந்த 4 வாலிபர்களை பிடித்தார். மேலும் சம்பவம் குறித்து உயா் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதிகாரிகள் விரைந்து வந்து படுகாயமடைந்த வீரர் ராகுல் சர்மாவை மீட்டு அந்தேரி செவன்ஹில்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய வாலிபரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய வாலிபர் வில்லேபார்லே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஹிருதே சாஜன்ராஜ்(வயது19) என்பது தெரியவந்தது. சம்பவத்தன்று வெளிநாட்டில் இருந்து வந்த நண்பரை அழைத்து செல்ல தந்தையின் சொகுசு காரில் விமான நிலையம் வந்து உள்ளார். காரில் கல்லூரி மாணவரின் நண்பர்கள் 4 பேர் இருந்து உள்ளனர். தடையை மீறி விமான நிலையத்தின் உள்ளே நுழைய முயன்றபோது கல்லூரி மாணவா் ஓட்டி சென்ற கார் சி.ஐ.எஸ்.எப். வீரர் மீது மோதி உள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கல்லூரி மாணவரை கைது செய்தனர்.
சிகிச்சை பலனின்றி சாவு
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சி.ஐ.எஸ்.எப். வீரர் ராகுல் சர்மா பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் மத்திய பிரதேசத்தில் உள்ள சொந்த ஊருக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட உள்ளது. விபத்தில் உயிரிழந்த சி.ஐ.எஸ்.எப். வீரருக்கு மனைவி மற்றும் 6 வயது மகள், 4 வயது மகன் உள்ளனர்.