மும்பையை அச்சுறுத்தும் காற்று மாசு


மும்பையை அச்சுறுத்தும் காற்று மாசு
x
தினத்தந்தி 21 Oct 2023 7:00 PM GMT (Updated: 21 Oct 2023 7:00 PM GMT)

டெல்லியை விட மோசமான நிலையில் மும்பையில் காற்றுமாசு மக்களை அச்சுறுத்தி வருகிறது.

மும்பை,

டெல்லியை விட மோசமான நிலையில் மும்பையில் காற்றுமாசு மக்களை அச்சுறுத்தி வருகிறது.

அதிகரிக்கும் மாசு

நாட்டின் தலைநகர் டெல்லிதான் காற்று மாசுபாடு கொண்ட நகரமாக அடையாளப்படுத்தப்படுகிறது. அந்த பட்டியலில் இப்போது மும்பையும் இணைந்துள்ளது. டெல்லியை விட மும்பையின் பல பகுதிகளில் சில நாட்களாகவே காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. வானிலை ஆராய்ச்சி அமைப்பின் அளவீட்டின் படி, அதிகாலையில் மும்பையின் காற்றுத்தர குறியீடு 119 என்ற அளவில் பதிவாகி இருக்கிறது. ஆனால் டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 83 ஆகத்தான் பதிவாகி இருக்கிறது. குறிப்பாக அந்தேரி, மஸ்காவ் மற்றும் நவிமும்பை உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரம் மோசமாக இருக்கிறது.

வெப்பகாற்று

தெற்கு மும்பை அதிகாலை நேரங்களில் புகைமூட்டமாக காட்சி அளிக்கிறது. காலை 9 மணிக்கு பின்னர் தான் இங்கு தெளிவான வானிலையை பார்க்க முடிகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து வீசும் குளிர்ந்த காற்று, கடற்கரையோரம் நிலவும் வெப்பமான காற்றை தாக்குகிறது. அந்த பகுதியில் படர்ந்திருக்கும் தூசுகள் இருவேறு காற்றின் பரப்பில் கலப்பதே தூசு மாசுபாடு அதிகரிப்பதற்கு காரணம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக அந்தேரி, மஸ்காவ் மற்றும் நவிமும்பை, கடலோர மும்பையில் தூசி மற்றும் புகையுடன் கூடிய வெப்பமான காற்று தேங்கி நிற்கிறது என்கிறார்கள். மும்பையில் காற்று மாசை தடுக்க தவறியதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் மாநில அரசு, மாநகராட்சி நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

வயதானவர்கள், குழந்தைகள்

இந்த நிலையில் அதிகரிக்கும் காற்று மாசு குறித்து டாக்டர் ராஜேஷ் சர்மா கூறியதாவது:- பொதுவாக காற்றின் தரம் மிகவும் மோசமாக இருக்கும்போது,அதில் நிறைய துகள்கள் , வாயுக்கள் மற்றும் ரசாயனங்கள் காணப்படுகின்றன. மக்கள் தொடர்ந்து இந்த மோசமான காற்றை உள்ளிழுக்கும் போது அவர்களுக்கு மூச்சுக்குழாய் அழற்சி ஏற்படுகிறது. மோசமான காற்றின் தரத்திற்கும், இருமல், மூச்சுத் திணறல் போன்ற மோசமான அறிகுறிகளுக்கும் இடையே தொடர்பு உள்ளது. இதனால் வயதானவர்களும், குழந்தைகளுமே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story