மராட்டியம் முழுவதும் 20 சதவீதம் வரை மின் கட்டணம் உயருகிறது


மராட்டியம் முழுவதும் 20 சதவீதம் வரை மின் கட்டணம் உயருகிறது
x

மும்பை உள்பட மராட்டியம் முழுவதும் 20 சதவீதம் வரை மின் கட்டணம் அதிகரிக்க உள்ளது.

மும்பை,

மும்பை உள்பட மராட்டியம் முழுவதும் 20 சதவீதம் வரை மின் கட்டணம் அதிகரிக்க உள்ளது.

மின் கட்டணம்

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக கூடுதல் விலைக்கு வெளிநாடுகளில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்யப்பட்டது. இதை கருத்தில் கொண்டு எரிபொருள் அட்ஜஸ்மென்ட் கட்டணத்தை (எப்.ஏ.சி.) விதிக்க மின் நிறுவனங்களுக்கு மராட்டிய மாநில மின் ஒழுங்குமுறை ஆணையம் (எம்.இ.ஆர்.சி.) ஒப்புதல் வழங்கி உள்ளது.

இதையடுத்து மராட்டியத்தில் 10 முதல் 20 சதவீதம் வரை மின் கட்டணம் அதிகரிக்க உள்ளது. அதாவது யூனிட்டுக்கு சுமார் ரூ.1 அதிகரிக்கலாம் என தெரிகிறது. இந்த மின் கட்டண உயர்வு இந்த மாதம் முதல் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.

3¼ கோடி வாடிக்கையாளர்கள் பாதிப்பு

இதுகுறித்து மராட்டிய மாநில மின் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், " மின் உற்பத்தி செய்வதற்கான இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி விலை அதிகமாகி உள்ளது. கியாஸ் மூலம் செயல்படும் மின் உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்தி செலவும் அதிகரித்து இருக்கிறது. எனவே தான் எப்.ஏ.சி. கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. அதிக விலை நிலக்கரி பிரச்சினை மும்பை அல்லது மராட்டியம் மட்டும் அல்ல, ஒட்டுமொத்த நாட்டுக்கும் உள்ளது " என்றாா்.

இந்த மின் கட்டண உயர்வு காரணமாக மும்பை பெருநகரில் மட்டும் 10½ லட்சம் பெஸ்ட் நிறுவன வாடிக்கையாளர்கள், 7 லட்சத்திற்கும் அதிகமான டாடா நிறுவன வாடிக்கையாளர்கள், 29 லட்சம் அதானி நிறுவன வாடிக்கையாளர்கள் மற்றும் மராட்டியத்தில் 2.8 கோடி எம்.எஸ்.இ.டி.சி.எல். நிறுவன வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே கியாஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு மின்சார கட்டண உயர்வு பேரிடியாக அமைந்து உள்ளது.

இதுகுறித்து தாராவியை சேர்ந்த முத்து கூறுகையில், " கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் மின் கட்டணம் அதிகரிக்காதது நிம்மதியாக இருந்தது. ஆனால் தற்போது மின் கட்டணம் அதிகரிக்க இருப்பது எங்களது மாத பட்ஜெட்டில் கைவைக்கும். குறிப்பாக ஏழை, எளிய மக்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள்" என கூறினார்.



Next Story