மராட்டியம்; ஓட்டலில் எற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலி; 2 பேர் படுகாயம்
மும்பை ஓட்டலில் எற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர். மேலும் 2 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மராட்டியம்,
மராட்டிய மாநிலம் மும்பை நகரின் சான்டாக்ரூஸில் 'கேலக்ஸி ஓட்டல்' செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மதிய வேளையில் அந்த ஓட்டலின் 3-வது தளத்தில் திடீரென்று தீப்பிடித்துள்ளது. தீ வேகமாக எரிந்து மற்ற இடங்களுக்கும் பரவியது. இதில் பலர் சிக்கி கொண்டனர். உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் 4 வண்டிகளில் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
நீண்ட போராட்டத்திற்கு பின் தீயை அணைத்து அதில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள வி.என். தேசாய் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தீ விபத்தில் சிக்கி இருந்த மேலும் 6 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. அது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் ரூபல் கஞ்சி (வயது 25), கிஷன் (வயது 28) மற்றும் கோர்தன் வரா (வயது 48) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.