மராட்டியத்தில் அதிரடி சோதனை; ரூ.250 கோடி போதைப்பொருள் பறிமுதல்


மராட்டியத்தில் அதிரடி சோதனை; ரூ.250 கோடி போதைப்பொருள் பறிமுதல்
x
தினத்தந்தி 22 Oct 2023 7:45 PM GMT (Updated: 22 Oct 2023 7:45 PM GMT)

மராட்டியத்தில் ரூ.250 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

மராட்டியத்தில் ரூ.250 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரகசிய தகவல்

மராட்டிய மாநிலம் நாசிக்கில் உள்ள சில தொழிற்சாலைகள், குடோன்களில் போலீசார் சமீபத்தில் சோதனை மேற்கொண்டபோது ரூ.300 கோடி மதிப்புள்ள 151 கிலோ மெபட்ரோன் போதைப்பொருளை கைப்பற்றி இருந்தனர். இது அரசியலிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சத்ரபதி சம்பாஜி நகர் (அவுரங்காபாத்) பகுதியில் சில இடங்களில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ஆமதாபாத் பிரிவு வருவாய் புலனாய்வு இயக்குனரகத்திற்கும், சத்ரபதி சம்பாஜி நகர் குற்றப்பிரிவு போலீசாருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது.

அதிரடி சோதனை

இதையடுத்து வருவாய் புலனாய்வு பிரிவு இயக்குனரக அதிகாரிகளும், போலீசாரும் சத்ரபதி சம்பாஜி நகர் பகுதியில் உள்ள 2 தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்பு கட்டிட வளாகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது ஒருவரின் வீட்டில் இருந்து 23 கிலோ கொகைன், சுமார் 2.9 கிலோ மெபட்ரோன் மற்றும் ரூ.30 லட்சம் ரொக்கம் சிக்கியது. இதேபோல பைதான் எம்.ஐ.டி.சி. பகுதியில் உள்ள மகாலட்சுமி இண்டஸ்ட்ரீஸ் என்ற தொழிற்சாலையில் இருந்து 4.5 கிலோ மெபட்ரோன், 4.3 கிலோ கேட்டமைன் மற்றும் 9.3 கிலோ கொண்ட மற்றொரு போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

ரூ.250 கோடி மதிப்பு

பறிமுதல் செய்யப்பட்ட மொத்த போதைப்பொருட்களின் சந்தை மதிப்பு ரூ.250 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்தனர். இதில் ஒருவர் போதைப்பொருள் வழக்கில் முக்கிய குற்றவாளி என கூறப்படுகிறது.


Next Story