பிரபுல் பட்டேலுக்கு பதவி வழங்கிய போது தான் சரத்பவார் ஜனநாயகமற்ற முறையில் நடந்து கொண்டார்; சுப்ரியா சுலே எம்.பி. ஆவேசம்


பிரபுல் பட்டேலுக்கு பதவி வழங்கிய போது தான் சரத்பவார் ஜனநாயகமற்ற முறையில் நடந்து கொண்டார்; சுப்ரியா சுலே எம்.பி. ஆவேசம்
x
தினத்தந்தி 8 Oct 2023 8:00 PM GMT (Updated: 8 Oct 2023 8:00 PM GMT)

பிரபுல் பட்டேலுக்கு பதவி, அதிகாரம் வழங்கிய போது தான் சரத்பவார் ஜனநாயகமற்ற முறையில் நடந்து கொண்டார் என சுப்ரியா சுலே எம்.பி. ஆவேசமாக கூறியுள்ளார்.

மும்பை,

பிரபுல் பட்டேலுக்கு பதவி, அதிகாரம் வழங்கிய போது தான் சரத்பவார் ஜனநாயகமற்ற முறையில் நடந்து கொண்டார் என சுப்ரியா சுலே எம்.பி. ஆவேசமாக கூறியுள்ளார்.

சுப்ரியா சுலே

தேசியவாத காங்கிரஸ் கட்சி 2 ஆக உடைந்து சரத்பவார், அஜித்பவார் தலைமையில் செயல்பட்டு வருகிறது. யார் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்பது தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த விசாரணையின் போது, சரத்பவார் ஜனநாயகமற்ற முறையில் கட்சியை நடத்தியதாகவும், கட்சியை தனது குறுநிலம் போல கருதியதாகவும் அஜித்பவார் தரப்பு வக்கீல் கூறியதாக ஜித்தேந்திர அவாத் தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் இந்த விவகாரம் குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், சரத்பவாரின் மகளுமான சுப்ரியா சுலே எம்.பி. கூறியதாவது:-

பிரபுல் பட்டேலுக்கு பதவி

பிரபுல் பட்டேல் விவகாரத்தில் தான் சரத்பவார் ஜனநாயகமற்ற முறையில் நடந்து கொண்டார். பிரபுல் பட்டேல் ராஜ்ய சபா எம்.பி. பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட போது அதை பல எம்.எல்.ஏ.க்கள் எதிர்த்தனர். ஆனால் சரத்பவார் உறுதியாக நின்று பிரபுல் பட்டேல் தான் நமது வேட்பாளர் என கூறினார். 2004-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த போதும் சரத்பவார் ஜனநாயகமற்ற முறையில் அவரை மத்திய மந்திரி ஆக்கினார். பிரபுல் பட்டேலுக்கு பதவி, அதிகாரம் வழங்கும் போது தான் சரத்பவார் ஜனநாயகமற்ற முறையில் நடந்து கொண்டார். அவர் ஜனநாயகமற்ற முறையில் நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டுகள் குழந்தை தனமானது. நகைப்புக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.

விமர்சனம்

தேசியவாத காங்கிரசில் பிரபுல் பட்டேல் சரத்பவாருக்கு மிகவும் நெருக்கமான தலைவர்களில் ஒருவராக இருந்தார். எனினும் கட்சி உடைந்த போது பிரபுல் பட்டேல் அஜித் பவார் அணியுடன் சென்றார். எனவே சரத்பவாரை ஜனநாயகமற்றவர் என தேர்தல் ஆணையத்தில் கூறிய அஜித்பவார் தரப்பை விமா்சிக்கும் வகையில் சுப்ரியா சுலே இவ்வாறு பேசி உள்ளார்.


Next Story