தேர்தல் சின்னம் குறித்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி- ஏக்நாத் ஷிண்டே அணி மகிழ்ச்சி


தேர்தல் சின்னம் குறித்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி- ஏக்நாத் ஷிண்டே அணி மகிழ்ச்சி
x
தினத்தந்தி 28 Sep 2022 9:15 PM GMT (Updated: 28 Sep 2022 9:16 PM GMT)

தேர்தல் சின்னம் குறித்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியினர் கூறினர்.

தானே,

தேர்தல் சின்னம் குறித்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியினர் கூறினர்.

கோர்ட்டு தீர்ப்பு

சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே, கட்சி தலைமைக்கு எதிராக அதிருப்தி அணியை உருவாக்கி மராட்டியத்தில் கடந்த ஜூன் மாதம் ஆட்சியை கைப்பற்றினார்.

இதையடுத்து ஏக்நாத் ஷிண்டே அணி தாங்கள் உண்மையான சிவசேனா என்று கூறியதுடன், கட்சியின் சின்னம் மற்றும் பெயருக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தை அணுகியது.

ஆனால் இதை எதிர்த்து சிவசேனா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு உத்தவ் தாக்கரே தரப்பின் மனுவை தள்ளுபடி செய்ததுடன், கட்சி சின்னத்தை உரிமை கோரிய ஏக்நாத் ஷிண்டே கடிதத்தை பரிசீலித்து முடிவு எடுக்க எந்த தடையும் இல்லை என உத்தரவிட்டது.

வரவேற்பு

இந்த தீர்ப்புக்கு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியை சேர்ந்தவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என கூறியுள்ளனர்.

இதுகுறித்து முதல்-மந்திரி ஷிண்டேவின் மகனும், கல்யாண் எம்.பி.யுமான ஸ்ரீகாந்த் ஷிண்டே கூறுகையில், "இந்த தீர்ப்பின் மூலம் அவர்கள் (உத்தவ் தாக்கரே தரப்பு) பாடம் கற்றுகொண்டு இருப்பார்கள் என்று நம்புகிறேன். பால்தாக்கரேவின் உண்மையான சிவசேனா எது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டிருப்பார்கள்" என்றார்.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரம்

இதேபோல முதல்-மந்திரி ஷிண்டே அணியின் செய்தி தொடர்பாளர் நரேஷ் மஸ்கே கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு காரணமாக தேர்தல் ஆணையத்தின் உரிமை மற்றும் அதன் அதிகாரம் நிலைநாட்டப்பட்டு உள்ளது.

சிவசேனாவின் 40 எம்.எல்.ஏ.க்களும், 18 எம்.பி.க்களில் 12 பேரும் ஏக்நாத் ஷிண்டே அணியில் இருக்கின்றனர். மேலும் மாவட்ட தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணியில் இருக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story