இந்தியா-சீனா எல்லைப்பதற்றத்தை தணிக்க குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் முயற்சி


இந்தியா-சீனா எல்லைப்பதற்றத்தை தணிக்க குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் முயற்சி
x
தினத்தந்தி 7 Aug 2017 6:24 AM GMT (Updated: 7 Aug 2017 7:07 AM GMT)

இந்தியா - சீனா எல்லையில் பதற்றம் அமைதியை ஏற்படுத்தும் நல்லெண்ணத்துடன்,வெற்றி பெற்ற சாம்பியன்ஷிப் பட்டத்தைத் திருப்பி அளிக்க குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் விருப்பம்தெரிவித்துள்ளார்.

மும்பையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற டயிள்யூபிஓ ஒரியண்டல் சூப்பர் மத்திய எடைப் பிரிவு போட்டியில் சீன வீரர் ஜுல்பிகர் மய்மைதியாலியை ஒலிம்பிக் வீரர் விஜேந்தர் சிங் வீழ்த்தி சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார்.

ஆனால், தமது வெற்றியை இந்தியா - சீனா நட்புறவுக்கு அர்ப்பணிப்பதாகவும், அதன் அடையாளமாக தமது வெற்றியைக் குறிக்கும் பெல்ட்டைத் திருப்பி அளிக்க விரும்புவதாகவும் விஜேந்தர் சிங் தெரிவித்தார்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த ஜூன் மாதம் மூதல் எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதி தொடர்பாக மோதல் நிலை காணப்படுகிறது.

இந்தியாவில் டோக்லாம் என்றும் சீனாவில் தோங்லாங் என்றும் அழைக்கப்படும் இடத்தில், எல்லைப்புறச் சாலையை நீ்ட்டிக்க சீனா முயன்றபோது அதை இந்தியா எதிர்த்ததால் இந்த பிரச்னை தீவிரமானது.சீனாவுக்கும், வடகிழக்கு இந்திய மாநிலமான சிக்கிம் மற்றும் பூட்டானுக்கும் இடையில் சர்ச்சைக்குரிய அந்த பகுதி உள்ளது.

மும்பையில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித் தந்ததற்காக, விஜேந்தர் சிங்குக்கு நாடு முழுவதும் பரவலாக பாராட்டுகள் குவிந்தன.

ஆனால், அவரது செயல் சமரசத்துக்கு வழிவகுக்காது என்று சிலர் கருதுகின்றனர்.

மும்பையில் மிகப் பெரிய தோல்வியை சீனர்கள் சந்தித்தது போல டோக்லாமிலும் நடைபெறும் என்று யோகா குருவும் தொழிலதிபருமான பாபா ராம்தேவ் தமது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

விஜேந்தர் சிங்கின் அறிவிப்புக்கு, சீன குத்துச் சண்டை வீரர் பதிலளித்தாரா அல்லது அப்போட்டியை நடத்தியவர்கள் விஜேந்தர் தமது பட்டத்தைத் திருப்பி அளிக்க அனுமதிப்பார்களா என்பது பற்றி தெளிவற்ற நிலை உள்ளது.

Next Story