ஆசிய விளையாட்டு போட்டி: வெள்ளி வென்ற ஆரோக்கிய ராஜிவுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு


ஆசிய விளையாட்டு போட்டி: வெள்ளி வென்ற ஆரோக்கிய ராஜிவுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 29 Aug 2018 8:12 AM GMT (Updated: 29 Aug 2018 8:12 AM GMT)

ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரரான ஆரோக்கிய ராஜிவுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை வழங்குவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். #EdappadiPalanisamy

சென்னை,

ஆசிய விளையாட்டு போட்டியில் கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத் தொகை அளிக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்தோனேசியாவில் நடந்து வரும் 18வது ஆசிய விளையாட்டு போட்டிகளில், இந்திய அணி சார்பில் வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்று சாதனை படைத்து வருகின்றனர். இதில் நேற்று நடைபெற்ற பேட்மின்டன், டேபிள் டென்னிஸ், வில்வித்தையில் பதக்கங்கள் வென்ற நமது வீரர், வீராங்கனைகள் கலப்பு 4*400 மீ. தொடர் ஓட்டப்பிரிவிலும் அசத்தினர்.

இதில் இந்திய அணி சார்பில், முகமது அனாஸ் யாஹியா, பூவம்மா, ஹீமா தாஸ், மற்றும் தமிழக வீரர் ஆரோக்கிய ராஜீவ் ஆகியோர் கலந்துகொண்டனர்.  இதில் நமது அணி போட்டி தூரத்தை 3 நிமிடம் 15.71 வினாடிகளில் கடந்து வெள்ளி வென்று சாதித்தது. இதில், பஹ்ரைன் அணி முதலாவதாக வந்து தங்கப்பதக்கம் வென்றது.

இந்நிலையில் கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத் தொகை அளிக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.


Next Story