உலக பெண்கள் குத்துச்சண்டை: 6-வது முறை தங்கம் வென்று மேரி கோம் சாதனை - ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து


உலக பெண்கள் குத்துச்சண்டை: 6-வது முறை தங்கம் வென்று மேரி கோம் சாதனை - ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
x
தினத்தந்தி 24 Nov 2018 5:49 PM GMT (Updated: 24 Nov 2018 5:49 PM GMT)

உலக பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் 6-வது முறை தங்கம் வென்று சாதனை படைத்த மேரி கோமுக்கு, ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

புதுடெல்லியில் உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் 48 கிலோ எடை பிரிவிற்கான இறுதி போட்டி இன்று நடந்தது.  இதில் இந்தியாவின் மேரிகோம், உக்ரைனின் ஹன்னா ஒகோட்டோவை (48 கிலோ) எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் 5-0 என்ற புள்ளி கணக்கில் ஒகோட்டோவை வீழ்த்தி மேரி கோம் 6வது முறையாக தங்க பதக்கத்தினை வென்றார். குத்துச்சண்டை அரங்கில் புதிய உச்சத்தை அடைந்திருக்கும் மேரிகோமுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இது குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில் மேரி கோம் ஆறாவது முறையாக தங்கம் வென்று சாதனை புரிந்ததற்கு பாராட்டுக்கள். இந்த சாதனை மூலம் இந்திய சிறுமிகளுக்கு நீங்கள் முன்மாதிரியாக விளங்குகிறீர்கள்” என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “‘இந்திய விளையாட்டுகளுக்கு இது ஒரு பெருமிதமான தருணம். உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில்  தங்கம் வென்ற மேரி கோமுக்கு வாழ்த்துக்கள். அவரது வெற்றி உண்மையிலேயே தனித்துவம் வாய்ந்தது” என தெரிவித்துள்ளார்.

மேலும் தங்கம் வென்ற மேரி கோமுக்கு, மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன்சிங் ரதோர், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Next Story