பிரிமீயர் பேட்மிண்டன் லீக் 5வது சீசன்; பி.வி. சிந்து அதிக தொகைக்கு ஏலம்


பிரிமீயர் பேட்மிண்டன் லீக் 5வது சீசன்; பி.வி. சிந்து அதிக தொகைக்கு ஏலம்
x
தினத்தந்தி 26 Nov 2019 3:19 PM GMT (Updated: 26 Nov 2019 3:19 PM GMT)

பிரிமீயர் பேட்மிண்டன் லீக் 5வது சீசனில் உலக சாம்பியன் பி.வி. சிந்து அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

பிரிமீயர் பேட்மிண்டன் லீக் 5வது சீசனுக்கான போட்டிகள் வருகிற ஜனவரி 20 முதல் பிப்ரவரி 9ந்தேதி வரை நடைபெறுகின்றன.  இந்த போட்டிகளில் 74 இந்திய பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

இதற்கான வீரர், வீராங்கனைகள் ஏலம் இன்று நடந்தது.  இதில், உலக சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனை பி.வி. சிந்து ரூ.77 லட்சம் என்ற அதிகபட்ச தொகைக்கு ஐதராபாத் ஹன்டர்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டு தக்க வைக்கப்பட்டார்.

இதேபோன்று உலக தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் உள்ள தாய் சூ யிங், இதே தொகைக்கு நடப்பு சாம்பியனான பெங்களூரு ராப்டர்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

இந்தியாவின் மற்றொரு முன்னணி வீரரான பி. சாய் பிரணீத் ரூ.32 லட்சம் தொகைக்கு பெங்களூரு ராப்டர்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டு அணியில் தக்க வைக்கப்பட்டார்.  ஆடவர் இரட்டையர் வீரர்களான பி. சுமீத் ரெட்டி (ரூ.11 லட்சத்திற்கு சென்னை சூப்பர்ஸ்டார்ஸ் அணியாலும்) மற்றும் சிராக் ஷெட்டி (ரூ.15.50 லட்சத்திற்கு புனே 7 ஏசஸ் அணியாலும்) ஏலம் எடுக்கப்பட்டு அணியில் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்தியாவின் இளம் பேட்மிண்டன் வீரர்களான சாத்விக்சாய்ராஜ் ராங்கி ரெட்டி மற்றும் லட்சயா சென் இருவரும் பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டு உள்ளனர்.  இவர்களில் சென், சென்னை சூப்பர்ஸ்டார்ஸ் அணியால் அவர்கள் நிர்ணயித்த அடிப்படை விலையான ரூ.10 லட்சம் என்ற தொகைக்கு பதிலாக ரூ.36 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

இதேவேளையில், புல்லேலா கோபிசந்தின் மகளான காயத்ரி கோபிசந்த், சூப்பர்ஸ்டார்ஸ் அணியாலும், அசாமின் இளம் வீராங்கனை அஸ்மிதா சாலிஹா, வடகிழக்கு வாரியர்ஸ் அணியாலும் ஏலம் எடுக்கப்பட்டனர்.

Next Story