ஈரானின் பிங்க் நிற மசூதி


ஈரானின் பிங்க் நிற மசூதி
x
தினத்தந்தி 16 April 2021 12:06 PM GMT (Updated: 16 April 2021 12:06 PM GMT)

ஈரானின் ஷிராஸில் உள்ள நாசர் அல்-முல்க் மசூதி, வெளியில் இருந்து பார்ப்பதற்கு ஒரு வழக்கமான மசூதி போல் தெரிகிறது, ஆனால் உள்ளே சென்றால்தான் சொர்க்கம் போல் பளிச்சிடுகிறது. சூரியன் உதிக்க ஆரம்பித்த உடனே, இந்த மசூதி ஜொலிக்க ஆரம்பிக்கிறது. வானவில்லின் வண்ணங்களை போல!

ஈரானிய நகரமான கோவாட்-இ-அரேப் மாவட்டத்தில் (Gowad-e-Arab) உள்ள ஷிராஷ்க்கு அருகில் இந்த மசூதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியை 1785 முதல் 1925 வரை கஜார் வம்சத்தினர் ஆட்சிசெய்தனர். அந்த வம்சாவளியில் வந்த நசீர் அல்-முதல்க் என்பவர், 1876 முதல் 1888-க்கு இடைப்பட்ட காலத்தில் இந்த மசூதியைக் கட்டமைத்துள்ளார். இந்த மசூதியை கட்டி முடிக்க 12 ஆண்டுகள் ஆனது. அந்த அளவுக்கு கட்டிடக்கலையால் நிரம்பியுள்ளது இந்த மசூதி. ஈரானிய கட்டிடக் கலைஞரான முகமது ஹசன் இ மெமர் மற்றும் முகமது ரெஸே கஷி சாஸ் இ சிராஸி ஆகியோர் இந்த அழகிய மசூதியை வடிவமைத்திருக்கிறார்கள்.இம்மசூதியின் மேற்பரப்பு, இளஞ்சிவப்பு நிற ஓடுகள் கொண்டு கட்டப்பட்டிருப்பதால் இது ‘பிங்க் மசூதி’ என்று அழைக்கப்படுகிறது. இது ஈரானின் ஷிராஷில் உள்ள ஒரு பாரம்பரிய மசூதியாகும். அது மட்டுமல்லாமல் இது மாஸ்க் ஆப் கலர்ஸ், ரெயின்போ மாஸ்க், கெலிடோஸ்கோப் மாஸ்க் என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.

ஈரானை அழகுபடுத்துகிற விஷயங்களில் ஒன்றாக கருதப்படும் பிங்க் மசூதியில், பதிக்கப்பட்டிருக்கும் வண்ண கண்ணாடியில் தெரியும் வானவில், மக்களை மிகவும் கவருகிறது. இந்த மசூதி வண்ணமயமான லெட் லைட் (lead light) ஜன்னல்களைக் கொண்டுள்ளது. இந்த பிங்க் மசூதியில் காணப்படும் திகைப்பூட்டும் வண்ண கண்ணாடியை தவிர, மேற்பரப்பில் வண்ணம் பூசப்பட்ட ஆயிரக்கணக்கான ஓடுகள், பாரசீக தரை விரிப்புகள் மற்றும் இந்த வழிபாட்டுத் தலத்தின் ஒவ்வொரு திசையிலும் தெரியும் வண்ணமயமான வானவில் ஆகியவை ஒரு கெலிடோஸ்கோப்பில் அடியெடுத்து வைப்பது போன்ற உணர்வைத் தூண்டுகிறது.

மேலும் இந்த மசூதியின் உள்ளே நடுப்பகுதியில் காணப்படும் திறந்த முற்றத்தில், ஒரு செவ்வகக் குளம் உள்ளது. அதை சுற்றிலும் பூக்கள் உள்ளன. மற்றும் கட்டிடத்தின் முன்பகுதியில் டஜன் கணக்கான அரேபிய பாணி கட்டிடக்கலை வளைவுகள் காணப்படுகின்றன. இவைகளை வெளிப்புற கண்ணாடியில் இருந்து பார்க்கும் போது மிகவும் அழகைத் தருகிறது. மேலும் இங்கு வடிவமைக்கப்பட்டுள்ள ஐந்து குழிவான வடிவமைப்பு, அங்குள்ள பிற பாரம்பரிய கூறுகளைக் காட்டுகிறது. கஜார் வம்சத்தினரால் கட்டப்பட்ட இந்த மசூதி, இன்றளவும் நசீர் அல் முல்க்கின் எண்டோவ்மென்ட் அறக்கட்டளையின் 
பாதுகாப்பில் உள்ளது.

மசூதியைப் பார்வையிட சிறந்த நேரம், அதிகாலை வேளைதான். ஏனென்றால் அதிகாலை நேரத்தில் உதிக்கும் சூரியனின் வெளிச்சம், மசூதியில் உள்ள வடிவங்களை வண்ண கண்ணாடி வழியாக தரையில் பிரதிபலிக்கும். இது பார்ப்பதற்கு மிகவும் அருமையான காட்சியாகும். இது இஸ்லாமிய வழிபாட்டுத் தலமாக இன்றும் செயல்படுகிறது.

Next Story