தீபாவளி திருநாள் - மஹாபலி கதை


தீபாவளி திருநாள் - மஹாபலி கதை
x

தீபாவளி என்பது ஒளித்திருநாள். தீபன் என்றால் விளக்கு; ஆவளி என்றால் வரிசை என்று பொருள். தீபங்களை வரிசையாக அடுக்கி வைத்து கொண்டாடப்படும் திருவிழாவாகும்.

தீபாவளி பண்டிகை கொண்டாடினால் துன்ப இருள் நீங்கி இன்ப ஒளி வீசும் என்ற நம்பிக்கை. ஐப்பசி மாத அமாவாசை முன்தினம் இது கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் பல நாடுகளில் இந்துக்கள், ஜைனர்கள் மற்றும் சீக்கியர்களால் தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

தீபாவளி கொண்டாடப்படுவதின் நோக்கம் குறித்து பல கதைகள் உள்ளன. நரகாசுரன் அழிக்கப்பட்ட நாள்; ராமர் அயோத்திக்கு திரும்பிய நாள்; மகாபலி சக்கரவர்த்தி பூமிக்கு வரும் நாள் போன்ற பல கதைகள் உள்ளன. நாம் மகாபலி சக்கரவர்த்தி கதை குறித்து பாப்போம்.

ஹிரண்யகசிபு மற்றும் பிரகலாதனின் பேரன் மஹாபலி சக்ரவர்த்தி ஆவார். மிக சிறப்பாக ஆட்சி செய்து வந்தார். மக்கள் அவர் ஆட்சியில் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்; மகாபலியை பெரிதும் போற்றினர். மஹாபலி சக்ரவர்த்தி தேவலோகத்தை கைப்பற்ற நினைத்தார். மகாபலியின் வலிமையை கண்டு அஞ்சிய தேவர்கள் மகா விஷ்ணுவிடம் சென்று இதற்கு ஒரு தீர்வு கொடுக்க வேண்டும் என்று முறையிட்டனர். மகாவிஷ்ணு தேவர்களை காப்பாற்றுவதாக வாக்களித்தார். அதன் படி வாமன அவதாரம் எடுத்தார். வாமனன் என்றால் குள்ளமான பிராமணன் என்று பொருள்.

வாமனன் ஒரு குடையை எடுத்துக்கொண்டு மஹாபலியிடம் சென்றார். மஹாபலி விருந்தோம்பல் அறத்தை சிறப்பாக கடைபிடிப்பவர். வாமன அவதாரத்தில் வந்த மஹாவிஷ்ணுவை வரவேற்று என்ன வேண்டுமோ கேளுங்கள் என்றார். மூன்றடி நிலம் வேண்டும் என்றார் வாமனன். மஹாபலி சிரித்துக்கொண்டே கொடுப்பதாக வாக்களித்தார்.

வாமன உருவத்தில் இருந்த மகாவிஷ்ணு விஸ்வரூபம் எடுத்தார். ஒரு அடியில் உலகத்தை அளந்தார்; மறு அடியில் வானத்தை அளந்தார்; மூன்றாவது அடிக்கு மகாபலியை பார்த்தார் வாமனாக வந்திருப்பது மஹாவிஷ்ணு என்பதை உணர்ந்து கொண்ட மஹாபலி மூன்றாவது அடிக்கு தன் தலையை காட்டினார். மஹாவிஷ்ணு தன் காலை மஹாபலியின் தலையில் வைத்து அழுத்தினார். மஹாபலி பூமிக்குள் புதைந்து, பூமிக்கு அடியில் உள்ள சுதல லோகத்தை அடைந்தார்.

மஹாபலி மிக நல்ல அரசர் மக்களால் மிகவும் விரும்பப்பட்டவர். அதனால் மஹாவிஷ்ணு மஹாபலிக்கு ஒரு வரம் கொடுத்தார். வருடத்தில் ஒரு நாள் நீ பாதாள லோகத்தில் இருந்து பூமிக்கு வரலாம், உன் மக்கள் எப்படி வாழ்கிறார்கள், ஆட்சி எப்படி நடைபெறுகிறது என்று பார்க்கலாம் என்று வரம் கொடுத்தார். மஹாபலி பாதாள லோகத்தில் இருந்து பூமிக்கு வரும் நாளை மக்கள் தீபாவளியாக கொண்டாடுகிறார்கள். தீபாவளி கொண்டாடுவதின் நோக்கமே மகாபலியை பூமிக்கு வரவேற்பது தான். மேலும் அவர் வரும் போது மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், ஆட்சி நன்றாக நடைபெறுகிறது என்ற எண்ணத்தை அவருக்கு உண்டாக்கவே மக்கள் தீபாவளியை வெகு சிறப்பாக கொண்டாடுகிறார்கள். மஹாபலி பூமிக்கு இரவு நேரத்தில் வருவதாக கருதப்படுகிறது. அவரை வரவேற்கவே இரவில் வரிசையாக தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாடப்படுகிறது.

தீபாவளி தினத்தன்று வீட்டில் உள்ள அனைவரும் விடியற்காலையில் எழுந்து தலையில் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளித்து புத்தாடை அணிந்து, கோவிலுக்கு செல்வார்கள். பின்பு வீட்டிற்கு வந்து இறைவனை வணங்குவார்கள். பிறகு சிறியவர்கள் பெரியவர்களிடம் வாழ்த்து பெற்று இனிப்புகள் உண்டு, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். அதன்பின்னர் வீட்டில் உள்ள பெரியவர்கள் அக்கம் பக்கம் வீடுகளுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிப்புகள் கொடுத்து வாழ்த்து தெரிவிப்பார்கள்.

தீமை அழிந்து நன்மை பெருகி அனைவரும் மகிழ்ச்சியாக வாழ தீபாவளி திருநாளில் இறைவனை வணங்கி தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்.


Next Story