பாரிஜாத மரம் வளர்க்க வழிகாட்டும் பெண் காவிரி


பாரிஜாத மரம் வளர்க்க வழிகாட்டும் பெண் காவிரி
x

வீட்டில் பாரிஜாத மரம் வளர்ப்பது பற்றி வழிகாட்டுகிறார் காவிரி மூர்த்தி. அந்த மரத்தை வளர்ப்பதற்கும், புகழ்பெற்ற பாரிஜாத மலர்கள் மலருவதற்கும் தேவையான தோட்டக்கலை நுட்பங்களையும் பகிர்ந்துகொள்கிறார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த காவிரி ஐ.டி. ஊழியராக பணி புரிகிறார். வீட்டில் பாரிஜாதத்தை வளர்ப்பதை பற்றி பேசுவது, இளமைக்காலத்துக்கு திரும்புவது போல் உணர வைக்கிறது என்றும் சொல்கிறார்.

பாரிஜாதம் என்ற சொல்லுக்கு வம்சாவளி அல்லது வானத்திலிருந்து வந்தவர் என்று பொருள். தன் குழந்தைப் பருவத்தை நினைவுகூர்வதற்காக வீட்டின் முன் பாரிஜாத மரத்தை வளர்க்க விரும்பினார் காவிரி.

"எனக்கு பூவின் நறுமணம் ரொம்ப பிடிக்கும். அவை மிகவும் மென்மையானவை. நான் அடிக்கடி மொட்டுகளை பறித்து வீட்டு அறையை அழகுபடுத்துவேன்" என்கிறார். 47 வயதான காவிரி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, தன் வீட்டு தோட்டத்தில் பாரிஜாதத்தை நட்டார். அது வேரூன்ற சில காலம் பிடித்தது. கடந்த ஆண்டுதான் முதல் முறையாக அதில் பூக்கள் பூத்திருக்கிறது.

பாரிஜாத மரத்தை வளர்க்க காவிரி தரும் சில குறிப்புகள்:

* உங்கள் தோட்டத்தில் தினமும் குறைந்தது ஆறு மணி நேரம் சூரிய ஒளி பரவி இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுங்கள். பாரிஜாதத்துக்கு நிழல் தேவையில்லை.

* ஒரு நர்சரிக்கு சென்று நல்ல பாரிஜாத மரக்கன்றை தேர்ந்தெடுங்கள். பாரிஜாத மரத்திற்கு அதிக பராமரிப்பு தேவையில்லை. அதனால் அதனை வளர்ப்பது எளிது.

* கோடையில் ஆண்டுக்கு ஒரு முறை கத்தரித்தால் நல்லது. இலைகள் மற்றும் கிளைகளை முழுவதுமாக வெட்டினால், அது மீண்டும் ஆரோக்கியமாக வளரும்.

* பாரி ஜாதம் மரத்துக்கு தண்ணீர் அவசியமானது.

* கோடையில் கூட, ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை தண்ணீர் விட வேண்டும். அதற்காக அதிகம் தண்ணீர் ஊற்றிவிடாதீர்கள்.

* மரம் உடனே வளர்ந்துவிடாது. பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்.

* மரத்தின் வளர்ச்சியை வேகப்படுத்த எப்போதாவது உரம் பயன்படுத்துங்கள். பாரிஜாத மலரைக் கொண்டு மாலை உருவாக்க அல்லது அறையை அழகுபடுத்த விரும்பினால், மொட்டுகளை பறிப்பதை உறுதிப்படுத்துங்கள்.

* பாரிஜாத இலைகள் பல மருத்துவக் குணங்கள் கொண்டவை. ஆயுர்வேதத்தில், காய்ச்சல், இருமல், மூட்டுவலி போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. இலைகளின் சாறு கசப்பானது. அதில் டானிக் தயாரிக்கப்படுகிறது.


Next Story