உயிர் கொடுத்த கரங்கள்


உயிர் கொடுத்த கரங்கள்
x

மத்திய பிரதேச மாநில வரலாற்றில் மூளைச்சாவு அடைந்த நபரின் இரு கைகளும் தானமாக வழங்கப்பட்டது இதுவே முதல் முறை. உறுப்பு தானத்தில் இது ஒரு புரட்சிகரமான நிகழ்வு.

மூளைச்சாவு அடைபவர்களின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்படுகின்றன. பெரும்பாலும் கண்கள், நுரையீரல், கல்லீரல், இதயம், சிறுநீரகங்கள் போன்றவை அத்தகைய உறுப்புகள் செயலிழந்த நிலையில் இருப்பவர்களுக்கு பொருத்தப்படுவதுண்டு.

எனினும் கைகள் போன்ற உடல் உறுப்புகள் மற்றவர்களுக்கு பொருத்தப்படுவது அரிதாகவே நடக்கும். மத்திய பிரதேச மாநிலத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் கைகள் முதன் முதலாக, மும்பையை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணுக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படும் நிகழ்வு அரங்கேறி உள்ளது.

இந்தூரில் வசித்து வந்த வினிதா கஜாஞ்சி என்ற பெண்மணி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

வினிதாவின் கணவர் சுனிலிடம் பேசி, உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதற்கு சம்மதிக்க வைத்தனர். இதையடுத்து வினிதாவின் தோல், நுரையீரல், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை தானம் செய்வதற்கு முதலில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அவரது கைகளையும் மாற்று அறுவை சிகிச்சை மூலம் கைகள் இழந்த நிலையில் இருப்பவருக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது.

இதுபற்றி இந்தூரை சேர்ந்த உடல் உறுப்பு தான சொசைட்டியின் செயலாளரும், மகாத்மா காந்தி நினைவு மருத்துவக் கல்லூரியின் டீனுமான டாக்டர் சஞ்சய் தீட்சித் கூறுகையில், ''மத்திய பிரதேச மாநில வரலாற்றில் மூளைச்சாவு அடைந்த நபரின் இரு கைகளும் தானமாக வழங்கப்பட்டது இதுவே முதல் முறை.உறுப்பு தானத்தில் இது ஒரு புரட்சிகரமான நிகழ்வு. வினிதாவின் கைகள் சிறப்பு விமானம் மூலம் மும்பைக்கு அனுப்பப்பட்டது. கை, கால்கள் இல்லாமல் பிறந்த மும்பையைச் சேர்ந்த 18 வயது இளம் பெண்ணுக்கு கை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது'' என்றார்.

வினிதாவின் மூத்த மகள் நிரிஹா, ''எனது தாய்க்கு பெண் குழந்தைகள் மீது தனிப் பாசம் உண்டு. அவரது கைகள் இளம் பெண்ணுக்கு பொருத்தப்படுவது ஆத்ம திருப்தியை அளிக்கிறது'' என்கிறார்.

வினிதாவின் நுரையீரல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு அதன் மூலம் இரண்டு நோயாளிகளுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. அவரது கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் இந்தூரில் உள்ள நோயாளிகளுக்கு பயன் தந்துள்ளது.

தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பின் (நோட்டோ) தரவுகளின்படி, இந்தியாவில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. உடல் உறுப்பு தானம் பற்றிய புரிதலும், விழிப்புணர்வும் இல்லாமல் இருப்பதுதான் இதற்கு காரணம்.


Next Story