பிரம்மாஸ்திரா படத்தை சாடிய கங்கனா ரணாவத்


பிரம்மாஸ்திரா படத்தை சாடிய கங்கனா ரணாவத்
x

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், ‘பிரம்மாஸ்திரா’ படத்தைப் பற்றியும், அதன் இயக்குனர், தயாரிப்பாளர் பற்றியும் சமூக வலைத்தளத்தில் சர்ச்சையான கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

பாலிவுட்டில் மிகவும் பிரமாண்டமான முறையில் 3-டி வடிவில் எடுக்கப்பட்ட படம், 'பிரம்மாஸ்திரா'. மூன்று பாகங்களாக உருவாக உள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தியேட்டரில் வெளியானது. இந்தி மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் இந்தப் படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை 'வேக் அப் சிட்', 'ஏ ஜவானி ஹே தீவானி' ஆகிய படங்களை இயக்கிய அயன் முகர்ஜி, இயக்கியிருக்கிறார். பிரமாண்டமான முறையில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் இந்துமதப் பின்னணியில் கற்பனை கலந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு பலதரப்பில் இருந்தும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் அரசியல் ரீதியாகவும், தான் இருக்கும் பாலிவுட் சினிமாவைப் பற்றியும், வாரிசு நடிகர்-நடிகைகள் பற்றியும் அவ்வப்போது ஏதாவது ஒரு கருத்தைப் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கும், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், 'பிரம்மாஸ்திரா' படத்தைப் பற்றியும், அதன் இயக்குனர், தயாரிப்பாளர் பற்றியும் சமூக வலைத்தளத்தில் சர்ச்சையான கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

அதில், "அயன் முகர்ஜியை 'ஜீனியஸ்' என்று சொல்பவர்களை சிறையில் தள்ள வேண்டும். பிரம்மாஸ்திரா படத்தை உருவாக்க 12 ஆண்டுகள் எடுத்துக்கொண்டார். 14 ஒளிப்பதிவாளர்கள், 85 உதவி இயக்குனர்களை மாற்றியிருக்கிறார். 400 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடத்தி, சுமார் 500 கோடியை காலி செய்திருக்கிறார்.

'பாகுபலி' கொடுத்த வெற்றியின் காரணமாக, 'ஜலாலுதீன் ரூமி' என்று இருந்த கதை நாயகனின் பெயரை 'ஷிவா' என்று மாற்றி, மத உணர்வுகளை தூண்ட முயன்றுள்ளார். இவரைப் போன்ற சந்தர்ப்பவாதிகள், படைப்பாற்றல் இல்லாதவர்கள். வெற்றிபெற வேண்டும் என்ற பேராசையை மட்டுமே கொண்டவர்களை 'மேதைகள்' என்று அழைப்பது சரியானது அல்ல.

அதே போல் தயாரிப்பாளர்களில் ஒருவரான கரண் ஜோஹர், தனது திரைப் படத்திற்கான ஸ்கிரிப்ட்களை எழுதுவதை விட, மற்றவர்களின் பாலியல் வாழ்க்கையைப் பற்றி தெரிந்துகொள்வதில்தான் அதிக ஆர்வம் செலுத்துகிறார். தென்னிந்திய பிரபலங்களை வைத்து இந்தப் படத்தை அங்கே ஓட்டி விடலாம் என்று நினைக்கிறார். அதன் மூலம் தென்னிந்திய நடிகர்கள், இயக்குனர்கள் போன்றோரிடம் பிச்சை எடுக்கின்றனர்" என்று கடுமையாக சாடி பதிவிட்டுள்ளார்.

இது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

1 More update

Next Story