நீர்பாசன கட்டுமானத்தின் முன்னோடியாக திகழும் கோப்பாடி தொட்டிப்பாலம்


நீர்பாசன கட்டுமானத்தின் முன்னோடியாக திகழும் கோப்பாடி தொட்டிப்பாலம்
x

சர் ஆர்தர் காட்டனால் கட்டப்பட்ட கோப்பாடி பாலம், முன்னோடி நீர்பாசன கட்டுமானமாக உயர்ந்து நிற்கிறது.

தமிழகத்தில் நீர்ப்பாசன கட்டுமானத்திற்கு, பிரிட்டீஷ் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் பெரும் பங்காற்றி இருக்கிறார். அவர் கடலூர் மாவட்டத்திலும் தன்னுடைய சிறப்பான கட்டுமான பங்களிப்பை அளித்துள்ளார். அதுவும் இன்றைய நவீன கட்டுமானத்துறைக்கே சவால் விடும் வகையில் சுரங்கப்பாதை வழியாக தண்ணீர் பாய்ந்தோட விட்டு விவசாயத்தை வளப்படுத்தி, ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோவில் செல்லும் வழியில் உள்ளது, குமராட்சி என்ற ஊர். இங்கிருந்து சுமார் ½ கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, கோப்பாடி. இங்கு நீர்ப்பாசன கட்டுமானத்துக்கு அடித்தளமாக, சுரங்கப்பாதை வழியாக தண்ணீர் செல்லும் தொட்டிப் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை 1899-ம் ஆண்டு சர் ஆர்தர் காட்டன் என்ற பிரிட்டீஷ் பொறியாளர் கட்டியுள்ளார். இவர் பிரிட்டீஷ் ஆட்சிக்காலத்தில் படை தளபதியாகவும் இருந்தவர்.

இவர் இந்தியாவில் நீர்ப்பாசன முறைகளை நெறிப்படுத்தவும், கால்வாய்கள் அமைப்பதற்காகவும் தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்திருக்கிறார். இந்திய நீர்ப்பாசனத்தின் தந்தை என்றும் இவரை அழைக்கின்றனர். பொறியியல் துறையில் ஆர்வம் கொண்ட இவர், தனது 15-வது வயதில் கிழக்கிந்திய கம்பெனியின் பொறியியல் பிரிவில் இணைந்தார்.

இவர் 1821-ம் ஆண்டு சென்னையில் தலைமை பொறியாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றினார். பிறகு 1822-ம் ஆண்டு ஏரி பராமரிப்பு துறையில் கண்காணிப்பு பொறியாளர்களுக்கு உதவியாளராக இருந்தார். இவர் தஞ்சை, கடலூர், கோவை, மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள ஏரி, கண்மாய், குளங்களை பராமரித்து, நீர் வினியோகம் செய்யும் பணியை சிறப்புடன் செய்ததற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன.

காவிரியும், கொள்ளிடமும் பிரியும் இடமான முக்கொம்புக்கு வரும் தண்ணீர், வீணாக கடலில் கலப்பதை தடுக்க கொள்ளிடத்தில் தடுப்பணையை (மேலணை) கட்டியது இவர்தான். அதையடுத்து கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 1840-ம் ஆண்டு அணைக்கரை என்னும் கீழணையையும் கட்டியுள்ளார். கொள்ளிடம் ஆற்றில் வரும் நீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து வீராணம் ஏரிக்கு திரும்பி விட்டார். இதன் மூலம் 1 லட்சம் ஏக்கருக்கு மேல் இப்பகுதி விவசாயிகள் பாசன வசதி பெற்று வருகின்றனர்.

இதேபோல் கொள்ளிடத்தில் இருந்து ஆதனூர் அருகே ராஜன்வாய்க்கால் பிரிந்து வருகிறது. இந்த வடக்கு ராஜன் வாய்க்கால் முட்டம், ஓமாம்புலியூர், கருப்பூர், புளியங்குடி, அதங்குடி, பருத்திக்குடி, குமராட்சி, கோப்பாடி வரை வந்து, அதன்பிறகு மணவாய்க்காலும், வீராணம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறும் வெள்ளியங்கால் ஓடையும் இணைந்து பழைய கொள்ளிடம் ஆறாக ஓடும் பகுதியில் முடிவடைந்து விட்டது.

இதனால் தண்ணீர் அனைத்தும் வீணாகக் கடலில் கலந்தது. இதை அறிந்த சர் ஆர்தர் காட்டன், கோப்பாடியில் இருந்து தவர்த்தாம்பட்டு, மெய்யாத்தூர், அகரநல்லூர், காட்டுகூடலூர், பூலாமேடு, சிவாயம், நாஞ்சலூர், நளன்புத்தூர், கொடிப்பள்ளம், கிள்ளை பொன்னந்திட்டு வரை 16 கிராம விவசாயிகளின் பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல முடிவு செய்தார்.

இதற்காக அவர் பழைய கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கோப்பாடியில் 1899-ம் ஆண்டு கட்டியதுதான் தொட்டி பாலத்துடன் கூடிய சுரங்கப்பாதை. அதாவது ஆற்றை கடந்து செல்வதற்கும், அதன் வழியாக தண்ணீரை கொண்டு பாசன வசதி செய்வதற்கும் ஒரே திட்டத்தில் தான் இந்த பாலத்தை கட்டினார். அதன்படி 15 அடியில் திறந்த வெளி வாய்க்கால் பாலம், 15 அடியில் சுரங்கப்பாதை வழியாக தண்ணீர் செல்லும் வசதி, அதற்கு மேல் வாகனங்கள் சென்று வர சாலை வசதி என தனது நீர்ப்பாசன கட்டுமானத்தை கட்டி முடித்தார். தலா 100 அடியில் 2 பிரிவாக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்தப் பாலம் செங்கற்கள், சுண்ணாம்பு, கடுக்காய், புண்ணாக்கு உள்ளிட்ட கலவை மூலம் கட்டப்பட்டது. பல ஆண்டுகளாக தொடர்ந்து மழைவெள்ளத்தை சந்தித்து வந்தாலும், இந்தப் பாலம் எந்தவித சேதமும் இன்றி, 124 ஆண்டுகளாக கம்பீரம் காட்டி நிற்கிறது. இந்த தொட்டி பாலம், சுரங்கப்பாதையில் பாசனத்திற்காக தண்ணீர் பாய்ந்து செல்வதை பார்க்க ரம்மியமாக இருக்கிறது. தற்போது இந்த தொட்டி பாலம் வழியாக 16 கிராம விவசாயிகள், 35 ஆயிரத்து 737 ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் சாகுபடி செய்து பயன் பெற்று வருகின்றனர்.

இந்தப் பாலத்தின் அருகில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம் கூட சேதமாகி வருகிறது. இது தவிர மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கட்டப்பட்ட பாலங்கள் சேதமடைந்தும் வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கூட பண்ருட்டி அருகே எனதிரிமங்கலம் தென்பெண்ணையாற்றில் கட்டி முடிக்கப்பட்ட சில மாதங்களிலேயே தடுப்பணை உடைந்துவிட்டது. ஆனால் 1899-ம் ஆண்டு கட்டப்பட்ட கோப்பாடி தொட்டி பாலத்தின் உறுதி அந்தப் பகுதி மக்களிடம் பெருமதிப்பைப் பெற்று நிற்கிறது.

நீர்ப்பாசன கட்டுமானத்திற்கு முன் உதாரணமாக விளங்கும் இந்த தொட்டிப் பாலம், கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் மாத்தூர் தொட்டிப் பாலத்திற்கு முன்பே கட்டப்பட்டதாகும். ஒரு மலைக்கும், மற்றொரு மலைக்கும் இடையே, பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக கட்டப்பட்ட, மாத்தூர் தொட்டிப்பாலம் 1966-ம் ஆண்டுதான் கட்டப்பட்டது. இது ஆசியாவின் மிக உயரமான, நீளமான பாலமாக பெயர் பெற்றிருந்தாலும், அதற்கு 67 ஆண்டுகளுக்கு முன்பே சர் ஆர்தர் காட்டனால் கட்டப்பட்ட கோப்பாடி பாலம், முன்னோடி நீர்பாசன கட்டுமானமாக உயர்ந்து நிற்கிறது.

தற்போதைய சூழ்நிலையில் இதேபோன்ற கட்டுமான முறைகளை தமிழக அரசு கையாள வேண்டும். அதாவது, பாசன வாய்க்கால், பாலம் என தனித்தனியாக கட்டி பணத்தை விரயம் செய்வதை விட, இது போன்ற கட்டுமான முறைகளை கையாண்டால் அது அரசாங்க பணத்தை மிச்சமாக்கும். இன்றைய இளம் பொறியாளர்கள், இந்த பாலத்திட்ட பணியை முன் மாதிரியாக எடுத்து, உத்வேகத்துடன் பணியாற்றினால் மாற்றங்கள் நிகழலாம்.


Next Story