அ.தி.மு.க. ஒன்றாக இணையுமா?

எம்.ஜி.ஆர். இந்த மூன்றெழுத்து மந்திரச்சொல்லுக்கு மகத்தான சக்தி உண்டு. ‘‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்தபின்னாலும் பேச்சிருக்கும்’’ என்று பாடியவர் அவர். ஆம் அது உண்மைதான்... ‘அந்த' மூன்றெழுத்து முடிந்த பின்னரும் அவரது மவுசு குறையவில்லை.
அதற்கு காரணம், அவருக்குள் மக்கள் இருந்தார்கள்; மக்களுக்குள் அவர் இருந்தார்.
பொதுவாக ஒரு கட்சி உடையும்போது பிரிந்து செல்பவர்கள் அல்லது நீக்கப்பட்டவர்கள் தாங்கள்தான் உண்மையான கட்சி என்றும், கட்சியின் கொடியும், சின்னமும் தங்களுக்கே சொந்தம் என்றும் கூறி வீதியில் இறங்கி அழிச்சாட்டியம் செய்வதோடு, கோர்ட்டுக்கு சென்று சட்டபோராட்டமும் நடத்துவார்கள்.
ஆனால் எம்.ஜி.ஆர். அப்படி செய்யவில்லை. தன் மீதும் மக்கள் மீதும் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்ததால், தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதும் அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை தொடங்கினார். சந்தித்த முதல் பொதுத்தேர்தலிலேயே வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார்.
எம்.ஜி.ஆர். இருக்கும் வரை அவர்தான் அந்த கட்சியின் அறிவிக்கப்படாத முதல்-அமைச்சர் வேட்பாளர். நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்ற நிலையில், அவர் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்ற வதந்தி-குழப்பத்துக்கு இடையே 1984-ல் நடந்த சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற்றது. தேர்தல் நடக்கும் மண்ணில் இல்லாமல் 13 ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு அப்பால் அன்னிய தேசத்தில் இருந்தபடி வெற்றி பெற்ற 'மக்கள் தலைவன்' அவரைத்தவிர உலகில் வேறு யாரும் கிடையாது.
எந்த அரசியல் சூறாவளியிலும் அசைக்க முடியாத ஆலமரமாக இருந்த அ.தி.மு.க., 1987-ல் எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு வேண்டா வெறுப்பாக அரசியலுக்கு வந்த அவரது மனைவி ஜானகி அம்மாள் ஒரு பக்கம் இழுக்க, ஜெயலலிதா மற்றொரு பக்கம் இழுக்க சற்று ஆட்டம் கண்டது. 1989-ல் தேர்தல் தோல்வி தந்த பாடத்தாலும், அரசியல் சதுரங்கத்தில் தாக்குப்பிடிக்க முடியாமலும் ஜானகி அம்மாள் 'ஆளை விட்டால் போதும்' என விலகிக்கொள்ள, ஜெயலலிதாவின் முழு கட்டுப்பாட்டில் வந்த அ.தி.மு.க. மீண்டும் வீறுகொண்டு எழுந்தது.
எம்.ஜி.ஆர். இருந்த வரை அவரது கண்ணசைவுக்கு கட்சியின் தலைவர்களும், நிர்வாகிகளும் கட்டுப்பட்டனர். தொண்டர்களுக்கு அவரது சொல்லே வேதவாக்கு. என்றாலும் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் தயக்கமின்றி அவரை சந்தித்து தங்கள் கருத்துகளை, பிரச்சினைகளை சொல்ல முடியும். ஆதங்கங்களை தெரிவித்து பரிகாரம் காண முடியும்.
ஆனால் ஜெயலலிதா தலைமையின் கீழ் அ.தி.மு.க. கிட்டத்தட்ட ஒரு ராணுவ அமைப்பு போல் மாறி, மிகுந்த கட்டுக்கோப்புடன் விளங்கியது. அதேசமயம் ஜெயலலிதாவைச் சுற்றி தவிர்க்கமுடியாத ஒரு 'பாதுகாப்பு வளையம்' உருவானதால், கட்சியின் மற்ற தலைவர்களோ, நிர்வாகிகளோ அவரை எளிதில் அணுக முடியாத நிலை ஏற்பட்டது. என்றாலும் நிர்வாகிகள் அவரவர் வேலையை சரியாக செய்து கொண்டு இருந்தார்கள். அதற்கான பலன் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கத்தான் செய்தது.
ஜெயலலிதா உயிரோடு இருந்தவரையில் அ.தி.மு.க.வில் இருந்த கட்டுக்கோப்பு இப்போது இல்லை. அவ்வளவு ஏன்?... இப்போது அ.தி.மு.க.வே முழுசாக இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒன்று, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒன்று, டி.டி.வி.தினகரன் தலைமையில் அ.ம.மு.க. என்ற பெயரில் ஒன்று என மூன்றாக அந்த கட்சி சிதறி கிடக்கிறது. திடீரென்று ஒரு கட்டத்தில் அரசியலுக்கு 'டாட்டா' சொன்ன ஜெயலலிதாவின் தோழி சசிகலா, பின்னர் மீண்டும் 'தனி ஆவர்த்தனம்' செய்ய தொடங்கி இருக்கிறார். இதில் சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க. மற்ற அணிகளை விட பலம் வாய்ந்ததாக விளங்குகிறது.
அ.தி.மு.க.வுக்கு இது சோதனையான காலம் என்றுதான் சொல்லவேண்டும். 1987-ல் ஏற்பட்டதை போல் மீண்டும் ஒரு நெருக்கடிக்கு அக்கட்சி உள்ளாகி இருக்கிறது.
2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி ஜெயலலிதா மறைவுக்கு பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக பதவி ஏற்றது; பின்னர் பொதுச்செயலாளரான சசிகலா முதல்-அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் பொங்கி எழுந்த ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதியில் மவுன விரதம் இருந்து 'தர்மயுத்தம்' நடத்தியது; சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் சிறை சென்றதால் 'திடீர் மாப்பிள்ளை'யாக எடப்பாடி பழனிசாமி முதல்வர் நாற்காலியில் அமர்ந்தது; அதன்பிறகு பன்னீர்செல்வம் எடப்பாடியுடன் ஐக்கியமாக, இருவரும் சேர்ந்து சசிகலாவை ஓரங்கட்டியது; 2021 சட்டசபை தேர்தலுக்கு பின் இருவரும் 'கா' விட்டுக்கொண்டது எல்லாம் கோலிவுட்டில் தயாராகும் ஒரு மசாலா படத்துக்குரிய அத்தனை அம்சங்களும் நிறைந்த பரபரப்பான அரசியல் நிகழ்வுகள் ஆகும்.
ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க.வில் இப்படி பரபரப்புகளுக்கும், திருப்பங்களுக்கும் பஞ்சமே இல்லை.
கை இரண்டு; கால் இரண்டு, கண் இரண்டு, காது இரண்டு என்று உறுப்புகள் பல இருந்தாலும் அவற்றை ஒழுங்குபடுத்தி இயங்க வைக்கக்கூடிய மூளையை ஆண்டவன் ஒன்றுதான் வைத்து இருக்கிறான். அதுபோல் ஆணையிடும் இடத்தில் எப்போதும் ஒரே 'தல'தான் இருக்க வேண்டும். இரண்டு பேர் இருந்தால் யார் சொல்வதை கேட்பது? இவர் சொல்வதை கேட்டு இந்தப்பக்கம் போவதா அல்லது அவர் சொல்வதை கேட்டு அந்தப்பக்கம் போவதா? என்ற குழப்பம் ஏற்பட்டு எந்த காரியமும் உருப்படியாக நடக்காது.
ஜெயலலிதா மறைவுக்கு பின் கட்சிக்கு யார் தலைமை தாங்கி வழிநடத்துவது என்பதில் குழப்பம் ஏற்பட்டதாலும் இந்த விவகாரத்தில் மூத்த தலைவர்களிடையே கருத்தொற்றுமை ஏற்படாததாலும், ஒரு சமரச ஏற்பாடாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற 'இரட்டை தலைமை' உருவாக்கப்பட்டது. இதுவே அந்த கட்சிக்கு ஏற்பட்ட முதல் சறுக்கல், பலவீனம்.
ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், துணை முதல்-அமைச்சரான ஓ.பன்னீர்செல்வத்துக்குத்தான் கட்சியில் முதலிடம் என்றாலும், இணை ஒருங்கிணைப்பாளரான முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆட்சி அதிகாரம் இருந்ததால் பல விஷயங்களிலும் அவர்தான் முன்னிலைப்படுத்தப்பட்டார். நிர்வாகிகளும் அவரையே சுற்றிச்சுற்றி வந்தனர். இதனால் கட்சியில் அவரது செல்வாக்கு வளர்ந்து, அவர் 'நம்பர் 1' இடத்துக்கு வந்தார். இந்த விஷயத்தில் ஓ.பன்னீர்செல்வம் போட்ட கணக்கு தப்பாகிவிட்டது.
அடுத்து, சட்டசபை தேர்தலில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்தபோது, எடப்பாடி பழனிசாமிக்கு விட்டுக்கொடுத்ததால், கட்சியில் பன்னீர்செல்வத்தின் பிடி தளர்ந்தது.
ஆட்சியில் இருந்தபோதே கட்சியில் யார் பெரியவர்? என்பதில் அவர்களுக்குள் நடந்து வந்த பனிப்போர், தேர்தல் தோல்விக்குப்பின் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த பொதுக்குழுவில் பகிரங்கமாக வெடித்தது. பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களால் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி தனது தலைமையில் இருப்பதுதான் உண்மையான அ.தி.மு.க. என்று சொல்ல, இல்லை தனது தலைமையில் இருப்பதுதான் அ.தி.மு.க. என்று ஓ.பன்னீர்செல்வம் முஷ்டியை உயர்த்த, விவகாரம் கோர்ட்டுக்கு சென்றுள்ளது. இந்த பிரச்சினைக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது.
அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையிலேயே, மத்திய அரசு அழைப்பின் பேரில் சமீபத்தில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற 'ஜி-20' அமைப்பின் ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இது அவருக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதப்படுகிறது.
அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள இத்தனை குழுப்பங்களுக்கும் ஒருவகையில் ஜெயலலிதாதான் காரணம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். ஏனெனில், எம்.ஜி.ஆர். யாரையும் தனது 'அரசியல் வாரிசு' என்று பகிரங்கமாக அறிவிக்காதபோதிலும், ஜெயலலிதாவை அடையாளம் காட்டிவிட்டுச் சென்றார். ஆனால் ஜெயலலிதாவோ அப்படி யாரையும் அடையாளம் காட்டவில்லை. தான் முதல்-அமைச்சராக தொடர முடியாத நிலை ஏற்பட்ட போதெல்லாம் ஓ.பன்னீர்செல்வத்தை அந்த நாற்காலியில் தற்காலிகமாக அமர வைத்தாரே தவிர, தனக்கு பின்னால் 'இவர்தான்' என்று அவர் யாரையும் கைநீட்டி அடையாளம் காட்டவில்லை.
''மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்கும் என்று; இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று'' என கண்ணதாசன் எழுதிய வரிகள், சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த ஜெயலலிதாவுக்கு தெரியாமல் போனது ஆச்சரியம்தான். அப்படி தெரிந்திருந்தால் தன் உடல்நிலையை கருத்தில் கொண்டு, கட்சியின் தலைமைக்கு ஒருவரை அடையாளம் காட்டி இருப்பார்.
ஜெயலலிதா அப்படி செய்து இருந்தால், அவரது பின்னால் நிர்வாகிகளும், தொண்டர்களும் அணிவகுத்து இருப்பார்கள். அதை அவர் செய்யாததால் இப்போது ஆளாளுக்கு பிரிந்து நிற்கிறார்கள். இதனால், கட்டுமானத்தில் இருந்து கற்கள் உருவப்பட்ட கோட்டை போன்று அ.தி.மு.க. தள்ளாடி கொண்டிருக்கிறது. தலைவர்களும், நிர்வாகிகளும்தான் பிரிந்து கிடக்கிறார்களே தவிர அடிமட்ட தொண்டர்கள் இடையே பிரிவினை இல்லை. விசுவாசமான அந்த அப்பாவி தொண்டர்கள், அ.தி.மு.க.வுக்கு இன்னொரு எம்.ஜி.ஆர். இன்னொரு ஜெயலலிதா இனி எப்போது கிடைப்பார்கள்? என்று ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் நூறு ஆண்டுகளானாலும் அ.தி.மு.க. அசைக்கமுடியாத சக்தியாக விளங்கும் என்று ஜெயலலிதா பெருமையோடு சொன்ன நம்பிக்கை வார்த்தைகள் காற்றோடு கரைந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் இன்னும் 2 ஆண்டுகளில், அதாவது 2024-ல் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாகவும், அ.தி.மு.க. ஆளும் கட்சியாகவும் இருந்து சட்டசபை தேர்தலை சந்தித்த போதே அந்த கட்சி தோல்வி அடைந்து, தி.மு.க.விடம் ஆட்சியை பறி கொடுத்தது.
இப்போதோ நெல்லிக்காய் மூட்டைப்போல் சிதறிக்கிடக்கிறது. இந்த நிலையில், ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு வலுவான நிலையில் இருக்கும் தி.மு.க.வை நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. எப்படி எதிர்கொள்ளப் போகிறது? என்ற கேள்விதான் எல்லோர் மனதிலும் எழுகிறது.
இதனால் பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வினரை ஓரணியில் கொண்டு வரும் முயற்சிகள் திரைமறைவில் நடந்து வருகின்றன. இதில் பாரதீய ஜனதா மிகுந்த அக்கறை காட்டுகிறது.
இந்த இணைப்பு நடவடிக்கைக்கு ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா தரப்புகள் ஆதரவாகவே இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் தனக்கு பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகளின் ஆதரவு இருப்பதால் எடப்பாடி பழனிசாமி இணைப்பை விரும்பவில்லை. அவர்களை கட்சிக்குள் கொண்டு வந்தால் தான் முக்கியத்துவத்தை இழக்க நேரிடும் என்றும், கட்சியில் தனது பிடி தளர்ந்துவிடும் என்றும் கருதுவதால் இணைப்புக்கு நூறு சதவீதம் வாய்ப்பு இல்லை அவர் திட்டவட்டமாக கூறி உள்ளார்.
ஒருவேளை பிரிந்து கிடக்கும் அணிகள் ஒன்றாக இணைந்தாலும் அ.தி.மு.க.வுக்கு யார் தலைமை தாங்குவது என்பதில் பிரச்சினை உண்டாகும். அதில் சமரசம் ஏற்பட்டு, அவர்களில் யாராவது ஒருவர் பொதுச்செயலாளரானாலும், மற்றவர்கள் அவரை முழுமனதுடன் ஏற்றுக்கொள்வார்களா? என்று சொல்ல முடியாது. எனவே இப்போது தனி அணிகளாக இருக்கும் அ.தி.மு.க. இணைப்புக்கு பின் தனித்தனி கோஷ்டிகளாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சிலர் கடலில் கரைத்த பெருங்காயம் போல் காணாமல் போய்விடும் ஆபத்தும் உள்ளது.
ஒரே உறைக்குள் 4 கத்திகள் இருக்க முடியாது என்பதாலும், தற்போது தான் வலுவாக இருப்பதாக கருதுவதாலும்தான் இணைப்பு முயற்சிக்கான கதவை எடப்பாடி பழனிசாமி திறக்க மறுக்கிறார்.
ஒரு தலைவனோ அல்லது கட்சியோ அரசியலில் தாக்குப்பிடிக்க வேண்டுமானால் வெற்றி என்பது மிக முக்கியம். தேர்தலில் தொடர் தோல்வியை சந்தித்தால் காணாமல் போய்விடும் ஆபத்து இருப்பதால்தான், கொள்கை ரீதியாக முரண்படும் கட்சிகள்கூட தேர்தல் சமயத்தில் சமரசம் செய்து கொண்டு கூட்டணி அமைத்துக்கொள்கின்றன.
தேர்தல்களில் குறைந்த வாக்குகள்கூட வெற்றி-தோல்வியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். கடந்த சட்டசபை தேர்தலில் டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.வால் 20-க்கும் அதிகமான தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றிவாய்ப்பை இழக்க நேரிட்டது. அ.ம.மு.க. வாக்குகளை பிரிக்காமல் இருந்திருந்தால், அந்த தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு கிடைத்து, சட்டசபையில் அக்கட்சியின் பலம் தொண்ணூரை நெருங்கி இருக்கும். அதேசமயம் மற்ற கட்சிகளுக்கு கிடைத்த தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்து இருக்கும். அ.ம.மு.க.வால் ஏற்பட்ட இழப்பை எடப்பாடி பழனிசாமி எந்த அளவுக்கு தீவிரமாக எடுத்துக்கொள்கிறார் என்று தெரியவில்லை.
அதிகாரம் என்பது போதை வஸ்து போன்றது. அதை சுவைத்து அனுபவித்தவர்களால் அவ்வளவு எளிதில் விட்டுவிட முடியாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றுதான் மக்கள் செல்வாக்கு பெற்ற மாபெரும் தலைவர் ('மாஸ் லீடர்') அல்ல என்பது எடப்பாடி பழனிசாமிக்கு நன்றாகவே தெரியும். என்றாலும் இப்போது இருக்கும் அந்தஸ்தை அவர் இழக்க தயாராக இல்லை. வழக்குகள் முடியும் வரை இப்போது இருக்கும் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், தொண்டர்களை தக்க வைத்துக்கொண்டாலே எதிர்காலத்தில் கட்சி தனது முழு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்று அவர் உறுதியாக நம்புவதாக தெரிகிறது.
அ.தி.மு.க.வின் நிலை இப்படியே தொடர்ந்தால், கட்சியின் கொடி, இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பதில் சிக்கல் ஏற்பட்டு, சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கும் நிலை ஏற்படலாம். இதனால் நாடாளுமன்ற தேர்தலிலும், அதன்பிறகு 2026-ல் வரும் தமிழக சட்டசபை தேர்தலிலும் அந்த கட்சியின் வாக்கு வங்கி சரிய வாய்ப்பு உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் டி.டி.வி.தினகரன் வாக்குகளை பிரித்தது போல், அந்த தேர்தல்களில் ஓ.பன்னீர்செல்வமும் பிரிக்கும் நிலை ஏற்படும். அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி சிதறும்போது அது மற்ற கட்சிகளுக்கு சாதகமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக்கொண்டு தனித்தனியாக சென்று மேய்ந்த 4 காளைகளை சிங்கம் ஒவ்வொன்றாக அடித்துக்கொன்ற கதை அ.தி.மு.க. தலைவர்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை.
அரசியல் புயலில் சிக்கி நடுக்கடலில் தத்தளிக்கும் அ.தி.மு.க. என்ற கப்பலை யார் இயக்குவது என்று 'கேப்டன்கள்' சண்டையிட்டுக்கொள்வதால், பாதுகாப்பாக கரைசேர முடியுமா? என்று உள்ளே இருக்கும் தொண்டர்கள் தவிக்கிறார்கள்.
கப்பல் பாதுகாப்பாக கரை சேருவதும், சேராததும் 'கேப்டன்கள்' கையில்தான் இருக்கிறது. பாவம் தொண்டர்கள்!
எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பின் உடைந்த அ.தி.மு.க.
1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு ஜெயலலிதா அணி, ஜானகி அணி என அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது. எம்.ஜி.ஆர். மறைந்ததால் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டு முதல்-அமைச்சர் ஆக்கப்பட்ட அவரது மனைவி ஜானகி அம்மாள், 23 நாட்களே அந்த பதவியில் நீடிக்க முடிந்தது. அவரது அரசை மத்திய அரசு கலைத்ததால், தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
ஜனாதிபதி ஆட்சியின்போது 1989-ம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலின் போது இரட்டை இலை சின்னத்தை முடக்கிய தேர்தல் கமிஷன் ஜெயலலிதா அணிக்கு 'சேவல்' சின்னத்தையும், ஜானகி அணிக்கு 'இரட்டை புறா' சின்னத்தையும் ஒதுக்கியது. இந்த தேர்தலில் தி.மு.க. 150 இடங்களில் வெற்றி பெற்று, 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை பிடித்தது. ஜெயலலிதா அணிக்கு 27 இடங்களும், ஜானகி அணிக்கு 2 இடங்களும் கிடைத்தன. இதனால் ஜானகி அம்மாள் அரசியலுக்கு முழுக்கு போட்டார்.
அதற்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) அ.தி.மு.க.வின் இரு அணிகளும் ஒன்றாக இணைய ஜெயலலிதா கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார். இரட்டை இலை சின்னம் மீண்டும் கிடைத்தது.
பாரதீய ஜனதா போடும் கணக்கு
அரசியல் ஒரு விசித்திரமான ஆடுகளம். இங்கு தனித்தனியாக இருந்தாலும், கூட்டணியாக இருந்தாலும் ஆளாளுக்கு ஒரு கணக்கு போடுவார்கள். அதற்கு பொதுநலம் என்ற முகமூடி அணிவிக்கப்பட்டாலும், உள்ளுக்குள் சுயநலம் மறைந்து இருக்கும்.
பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. அணிகள் ஒன்றாக இணையவேண்டும் என்பதில் அக்கட்சியினரை விட பாரதீய ஜனதா அதிக அக்கறை காட்டுவது ஏன்? என்ற கேள்வி எழலாம்.
அ.தி.மு.க. அணிகளின் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒரு கணக்கு போட்டால், பாரதீய ஜனதா தனது சொந்த நலன் கருதி தனியாக ஒரு கணக்கு போடுகிறது.
தொடர்ந்து 2 நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா 3-வது முறையாக, 2024-ல் நடைபெற இருக்கும் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறது. தேசிய அளவில் எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாதது பாரதீய ஜனதாவுக்கு மிகவும் சாதகமான அம்சம் ஆகும். அதற்காக மெத்தனமாக இருந்து விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கும் அக்கட்சியின் தலைவர்கள், இப்போதே தேர்தலை சந்திப்பதற்கான வியூகங்களை வகுக்க தொடங்கிவிட்டனர்.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் கணிசமான இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் பாரதீய ஜனதா, வலுவான கூட்டணி அமைத்தால் மட்டுமே அது சாத்தியம் என்பதையும் நன்றான அறிந்தே இருக்கிறது. சிதறிக்கிடக்கும் அ.தி.மு.க.வை ஒருங்கிணைத்து அந்த கட்சியுடனும், மேலும் சில கட்சிகளுடனும் சேர்ந்து கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தால் தி.மு.க.வின் வெற்றியை ஓரளவு தடுப்பதோடு, கணிசமான இடங்களை கைப்பற்றலாம் என்பது பாரதீய ஜனதா தலைவர்களின் திட்டம்.
இதனால்தான் அ.தி.மு.க. அணிகளை ஒன்றாக இணைப்பதற்கான முயற்சிகளை பாரதீய ஜனதா மேலிடம் மும்முரமாக மேற்கொண்டு உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் வலுவான தி.மு.க. கூட்டணியை வீழ்த்தவேண்டுமானால் அ.தி.மு.க. ஒரே கட்சியாக இருக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சியின் மேலிட தலைவர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். அ.தி.மு.க. ஒன்றாக இருப்பதையே பிரதமர் மோடி விரும்புகிறார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான சிலரை, பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா அழைத்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாரதீய ஜனதாவோ இந்த இணைப்பில் தனக்குள்ள லாபத்தை கணக்கு போடுகிறது. எடப்பாடி பழனிசாமியோ, தனது அரசியல் எதிர்காலம் கருதி இணைப்பு நடவடிக்கைக்கு பச்சைக்கொடி காட்ட மறுக்கிறார். ஆனால் அவருக்கு நெருக்கமாக இருக்கும் தலைவர்கள் சிலர், மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சியில் இருப்பதால் அந்த கட்சியின் தயவு தங்களுக்கு தேவை என்றும், மேலும் தமிழகத்தில் ஆளும் தி.மு.க.வை சமாளிக்க அ.தி.மு.க. ஒன்றாக இருப்பது அவசியம் என்றும் அவருக்கு யோசனை தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.
இணைப்புக்கு எடப்பாடி பழனிசாமி முட்டுக்கட்டையாக இருப்பதால், அவர் மீது பாரதீய ஜனதா மேலிடம் மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஒருவேளை அ.தி.மு.க. ஒன்றுபட வாய்ப்பு இல்லாமல் போகும் பட்சத்தில் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் அணிகளுடனும் மற்றும் சில கட்சிகளுடனும் பாரதீய ஜனதா கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு உள்ளது.
அந்த கட்சி கோவை, நீலகிரி, வேலூர், ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, தென்சென்னை உள்ளிட்ட சுமார் 10 நாடாளுமன்ற தொகுதிகளை குறிவைத்து இருக்கிறது. அந்த தொகுதிகளில் எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற எண்ணத்தில் இப்போதே ஆயத்த பணிகளை தொடங்கிவிட்டது.
தமிழகத்தில் பா.ஜனதாவின் நிலை
வட மாநிலங்களில் பாரதீய ஜனதா வலுவாகவே உள்ளது. ஆனால் கர்நாடகம் தவிர தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய பிற தென்மாநிலங்களில் அது இன்னும் பலவீனமாகத்தான் இருக்கிறது. இதனால் பாரதீய ஜனதா தலைவர்கள், இந்த மாநிலங்களில் கட்சியை வளர்ப்பதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொண்டு உள்ளனர். அதற்கு ஓரளவு பலனும் கிடைத்து வருகிறது.
தமிழகத்தில் ஒரு காலத்தில் தேட வேண்டிய நிலையில் இருந்த பாரதீய ஜனதா இப்போது வேகமாக வளர்ந்து வருகிறது என்பதை அக்கட்சியின் தீவிர எதிர்ப்பாளர்கள்கூட ரகசியமாக ஒப்புக்கொள்வார்கள்.
எனவே, காவிக்கட்சிக்கு இங்கு இடமில்லை என்றெல்லாம் இனி பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை என்றும், யாரை எங்கே வைக்கவேண்டும் என்று தீர்மானிப்பவர்கள் மக்கள்தானே தவிர, மற்றவர்கள் அல்ல என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
தமிழகத்தில் பாரதீய ஜனதாவை பலப்படுத்துவதில் தீவிரமாக இருக்கும் மாநில தலைவர் அண்ணாமலை வருகிற ஜனவரி மாதம் முதல் மாநிலம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. ''இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம்'' என்ற திட்டத்தின் கீழ் கிராமங்களில் வீடுகளுக்கு சென்று மக்களை சந்தித்து கட்சிக்கு ஆதரவு திரட்ட பாரதீய ஜனதாவினர் தீர்மானித்து உள்ளனர்.






