சென்னையில் பெண்ணின் வீட்டில் பதுக்கிய 10 பழங்கால சிலைகள் சிக்கின


சென்னையில் பெண்ணின் வீட்டில் பதுக்கிய 10 பழங்கால சிலைகள் சிக்கின
x

சென்னையில் பெண்ணின் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 10 பழங்கால சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு போலீசார் மீட்டனர்.

சென்னை

சென்னை ராஜா அண்ணாமலைபுரம், 7-வது மெயின் ரோட்டில், முதல் குறுக்கு தெருவில் வசிப்பவர் ஷோபா துரைராஜன். இவரது வீட்டில் பல கோடி மதிப்புள்ள பழங்கால ஐம்பொன் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தி உரிய விசாரணை நடத்த, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ் உத்தரவிட்டார்.

அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மோகன், முத்துராஜா மற்றும் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் ஆகியோர் தலைமையில் இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அதிரடியாக புகுந்து, ஷோபா துரைராஜன் வீட்டில் சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையில் ஷோபா துரைராஜன் வீட்டில் 10 பழங்கால சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது போல, வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த சிலைகள் சுமார் 400 ஆண்டுகள் பழமையானவை. அத்தனையும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள் ஆகும்.

அந்த சிலைகளை பிரபல சிலை கடத்தல் மன்னன் மறைந்த தீனதயாளனிடம் இருந்து ஷோபா வாங்கினாராம். ஆனால் இந்த சிலைகள் வாங்கியதற்கு ஷேபா முறையாக கணக்கு வைத்திருந்தார். மேலும் இந்த சிலைகளை விற்பனை செய்வது தனது நோக்கம் இல்லை என்றும் ஷோபா போலீசாரிடம் தெரிவித்தார்.

சிலைகளுக்கு கொடுத்த பணம், வங்கி மூலம் தீனதயாளனுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது தொடர்பான ஆவணங்களையும் ஷோபா போலீசாரிடம் காட்டினார். இதனால் அவர் மீது தற்போது வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பழமையான சிலைகள் என்பதால், அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 10 சிலைகள் விவரம் வருமாறு:-

1.விநாயகர் சிலை. 2.நின்ற நிலையிலான அம்மன் சிலை. 3.ஆண் துறவி சிலை. 4.ஆண் தெய்வ சிலை. 5.இன்னொரு ஆண் துறவி சிலை.

6.சிவன்-பார்வதி இணைந்த சிலை. 7.சிவன் சிலை. 8.பெண் தெய்வ சிலை. 9.ஆடு தோற்றமுடைய சிலை. 10.தனி அம்மன் சிலை.

இவற்றில் விநாயகர் சிலையின் பின்புறம் நாட்டார் மங்கலம் என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. எனவே விநாயகர் சிலை, நாட்டார் மங்கலத்தில் உள்ள கோவிலில் இருந்து திருடப்பட்டதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் தமிழகத்தில் நாட்டார் மங்கலம் என்ற பெயரில் 3 ஊர்கள் உள்ளன. இவற்றில் எந்த ஊரில் உள்ள கோவிலில் இந்த சிலை திருடப்பட்டது, என்பதை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இதர 9 சிலைகளும் எந்த கோவிலில் திருடப்பட்டவை என்பது பற்றியும் விசாரணை நடப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story