கம்ப்யூட்டர் நிறுவன பெண் அதிகாரியிடம் ரூ.10 லட்சம், நகை மோசடி - வாலிபர் கைது


கம்ப்யூட்டர் நிறுவன பெண் அதிகாரியிடம் ரூ.10 லட்சம், நகை மோசடி - வாலிபர் கைது
x

கம்ப்யூட்டர் நிறுவன பெண் மேலாளரிடம் ரூ.10 லட்சம் மற்றும் நகை மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை

சென்னையை அடுத்த பெருங்குடியை சேர்ந்த 35 வயதான இளம்பெண், சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர், துரைப்பாக்கம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:

பெரும்பாக்கத்தை சேர்ந்த ஜான்சன் அருள்மாறன் (35) என்பவருடன் முகநூல் மூலமாக 2017-ம் ஆண்டு முதல் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. என்னை திருமணம் செய்து கொள்வதாக அவர் கூறினார். இதனால் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தோம்.

ஆனால் அவருக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததால் 2021-ம் ஆண்டு முதல் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். நாங்கள் சேர்ந்து வாழும்போது அவர், என்னிடம் தொழில் தொடங்க இருப்பதாக கூறி ரூ.10 லட்சமும், 19 கிராம் தங்க நகையும் வாங்கினார். அந்த பணத்தை திருப்பி கேட்டபோது தரமறுத்ததுடன், எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

இது குறித்து துரைப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் மோசடி, ஆபாசமாக பேசுதல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

பின்னர் சம்பவம் தொடர்பாக ஜான்சன் அருள்மாறனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story