தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கனஅடி நீர் திறப்பு
கனமழையால் தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை புறநகர் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த நீர்மட்ட உயரமான 24 அடியில் நேற்றைய நிலவரப்படி 20.15 அடி தண்ணீர் உள்ளது. நீர்வரத்து 1,510 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 500 கன அடியாகவும் இருந்தது.
மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கனஅடியில் 2,641 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும்பட்சத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பது அதிகரிக்கப்படும் என காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்து இருந்தார்.
அதன்படி செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் நீர்மட்டம் கிடுகிடுெவன உயர்ந்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேற்று கூடுதலாக 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது.
இதன்மூலம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீர்வரத்து மேலும் அதிகரிக்கும்பட்சத்தில் உபரிநீர் திறப்பும் படிப்படியாக உயர்த்தப்படும் எனவும், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை 20 அடியில் வைத்து கண்காணிக்கவும் முடிவு செய்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
செம்பரம்பாக்கம் ஏரியில் கூடுதலாக உபரி நீர் திறக்கப்பட இருப்பதை அறிந்ததும், அந்த பகுதியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் மேய்ச்சலுக்கு விட்டிருந்த தங்களது ஆடுகளை அவசர அவசரமாக வீடுகளுக்கு ஓட்டிச்சென்றனர்.
அவர்கள் செம்பரம்பாக்கம் ஏரி மதகின் முன்புறம் உள்ள தரைப்பாலத்தை கடந்து செல்லும்வரை காத்திருந்து அதன்பிறகு உபரிநீரை அதிகாரிகள் திறந்து விட்டனர்.